"அந்தப் பாட்டு பைக்ல கம்போஸ் பண்ணது!" - ஜி.வி.பிரகாஷ் | Madrasapattinam | G V Prakash
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி என 100 படங்களைத் தாண்டி இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்ததில் பெரிய வரவேற்பை பெற்ற ஒரு படம், `மதராசப்பட்டினம்'. இப்படத்தில் இடம்பெற்ற ’பூக்கள் பூக்கும் தருணம்’ பாடல் உருவான விதம் பற்றி சமீபத்திய ஒரு கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.
ஜி.வி.பிரகாஷ் அப்பாடல் பற்றி கூறுகையில், "ஓர் இசையமைப்பாளருக்கான ஐடியா எங்கிருந்து கிடைக்கும் என்றே தெரியாது. என்னுடைய மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்று, ’மதராசப்பட்டினம்’ படத்தில் வந்த `பூக்கள் பூக்கும்'. அந்தப் பாடலை நான் கம்போஸ் செய்தது ஒரு பைக் பயணத்தின்போது. என் நண்பருடன் நான் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். அவர் ஓட்டினார், நான் பின்னால் அமர்ந்திருந்தேன். திடீரென இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் பற்றி சிந்திக்கையில் `தான தோம் தன னா' என்ற யோசனை வந்தது.
நண்பரை உடனடியாக பைக்கை நிறுத்தச் சொல்லி மொபைலில் ட்யூனை பாடி பதிவு செய்துகொண்டேன். பின்னர் வீட்டுக்கு வந்ததும் பியானோவில் பாடலை வாசித்தேன். இயக்குநரை அழைத்துப் போட்டுக் காட்டினேன்.
அவர் அதனைக் கேட்டுவிட்டு, `இந்தப் பாடலைப் பயன்படுத்த படத்தில் சூழலே இல்லையே' என்றார். ’அதற்காக ஒரு சூழலை உருவாக்குங்கள், இந்தப் பாடல் மிக அழகாக இருக்கிறது' என்றேன். அதற்குப் பிறகு ஒரு சூழலை அவர் உருவாக்கினார். அந்தப் பாடல் என்னுடைய பெரிய ஹிட்டாக அமைந்தது" என்றார்.

