" ‘காதல் அழிவதில்லை’ல நடிக்க முதன்முதலா சென்னை வந்தேன்!" - சார்மி கௌர் | Charmy Kaur
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் `Slumdog: 33 Temple Road' என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் சார்மி கௌர், "2002ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது ஊடக நண்பர்களைச் சந்தித்தேன். அதன்பிறகு பல படங்களில் நடித்தேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய அன்பைப் பெற்றேன். இன்றும் உங்களைச் சந்தித்துப் பேசும்போது, அந்தப் பாசமும், நெருக்கமும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்கிறேன். ‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன்.
ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளோம். ஆனால், நேரடி தமிழ் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.
விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர். அதேநேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும்கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிகரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன். தபு மேடத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம். கதையைக் கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார். தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல், முழுக் கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்ஷன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்ஷன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன. ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்துவோம்” என்றார்.

