சூர்யாவின் `புறநானூறு' SKவின் `பராசக்தி' ஆனது எப்படி? சுதா கொங்கராவின் பதில் | Sudha Kongara
சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ள 'பராசக்தி' பற்றி இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி அளித்துள்ளார். முதலில் சூர்யா நடிப்பில் புறநானூரு என திட்டமிடப்பட்ட படம், எப்படி சிவகர்த்திகேயனின் பராசக்தி படமாக மாறியது என பதில் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயனுடைய 25வது படமாக உருவாகியுள்ளது சுதா கொங்கரா இயக்கியுள்ள `பராசக்தி'. ஜனவரி 10ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் பற்றி பேட்டி ஒன்றை அளித்துள்ளார் இயக்குநர் சுதா.
அந்தப் பேட்டியில் சூர்யாவின் புறநானூறு தான், இப்போது பராசக்தியா எனக் கேட்கப்பட "இந்தக் கதை முதலில் புறநானுறு என சூர்யா நடிப்பதாக இருந்தது. கோவிட் சமயத்தில் நான் சொன்ன கதை இது. வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் எனக்கு நெருங்கிய நண்பர். 2019ல் உலகமே ஸ்தம்பித்து நின்ற போது, நாங்கள் பல யோசனைகளை பேசினோம். அதில் இந்த யோசனை பிடித்தது, இந்த பின்னணியில் ஒரு கதை உருவாக்கலாம் என தோன்றியது. அப்போது எனக்கு தெரிந்த ஹீரோ சூர்யா தான். அவருக்கு போன் செய்து இந்தக் கதையை கூறினேன். அவருக்கும் ரொம்ப பிடித்தது. உடனே கதைக்கான ஆராய்ச்சி வேலைகளை துவங்கினேன். அவர் ஏன் விலகினார் என்பது தெளிவாக எனக்கு தெரியவில்லை.
ஆனால் உறுதியாக தெரிந்த ஒரு விஷயம் என்ன என்றால், தொடர்சியாக படப்பிடிப்பு போக முடியாத சூழல் இருந்தது. ஆனால் இந்தப் படம் தொடர்சியாக படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால், வணிகரீதியில் பின்னடைவு ஏற்படும். தயாரிப்பு நிறுவனம் அந்த சிக்கலை எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. தொடர்சியாக படம் எடுக்க முடியாது என்பது தான் முக்கிய காரணமாக இருந்தது" என்றார்.
இந்தப் படம் எந்த கட்டத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக மாறியது என்ற கேள்விக்கு, "தயாரிப்பாளர் அருண் விஷ்வா நெடுநாட்களாக சிவாவுக்கு ஏதாவது கதை இருக்கிறதா என சூரரைப்போற்று சமயத்தில் இருந்தே கேட்டு வந்தார். அப்போது என்னிடம் எதுவும் இல்லை. இந்தப் படம் தள்ளிப் போகிறது என்ற சூழலில் அருண் என்னை வந்து சந்தித்தார். ஒரு காதல் கதை இருக்கிறது எனக் கூறினேன். பின்பு கொட்டுக்காளி படம் பார்க்க சென்ற போது அங்கு சிவாவை சந்தித்தேன். அப்போது அந்த காதல் கதை பற்றி கூறினேன், அவருக்கும் பிடித்திருந்தது. அதன் பின்பு பேசிக் கொண்டிருந்த போது புறநானூறு படத்தின் கதையை ஒரு பத்து வரிகளில் கூறினேன். முழு கதை கூட கேட்காமல், நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என சிவா தான் கூறினார். எங்கே கையெழுத்து போட சொன்னாலும் போடுகிறேன், நான் இந்தப் படம் செய்கிறேன், 2024 டிசம்பரில் துவங்கலாம் எனவும் கூறினார். சொன்ன மாதிரியே செய்தார், படமும் நடந்தது" என்றார்.
பராசக்தி என்ற தலைப்பு, தேர்தல் சமயத்தில் இந்தப் படம் வருவது போன்றவற்றை முன்வைத்து சில சர்ச்சைகள் எழுந்துள்ளதே எனக் கேட்கப்பட "இந்தப் படத்தை முதலில் ஒரு ஹீரோவிடம் கூறிய போது, தேர்தல் காலம் எதுவும் இல்லை. மேலும் இது ஒரு அரசியல் படம் அல்ல, மாணவர் இயக்கத்தை பற்றிய படம். இந்த உலகின் முதல் மாணவர் புரட்சி என்று கூட கூறலாம். 69களில் தான் பிரான்சில் நடந்தது. ஆனால் 65லேயே ஒரு சக்திவாய்ந்த புரட்சி இங்கு நடந்துவிட்டது. மாணவர்களின் புரட்சி தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றியது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அது எனக்கு பெரிய ஆர்வத்தை கொடுத்தது. இப்போது அரசியலோடு ஒப்பிடப்படுது என்றால், முன்பு படம் நின்றதும், சில தாமதங்களும் நடந்ததால் இவ்வளவு தள்ளி வருகிறது. மற்றபடி தேர்தலையொட்டி வரும் திட்டமே இல்லை" என்றார்.
பராசக்தி என்ற தலைப்பு எதனால் என்றதும் "மாணவர் சக்திதான் இதில் பராசக்தி. இது மிக பொருத்தமான தலைப்பு, புறநானூறும் பொருத்தமானது தான். ஆனால் நான் சிவா உட்பட பலரிடமும் கூறினேன், பராசக்தி கிடைத்தால் நன்றாக இருக்கும் என. ஆனால் அவர்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை. பின்பு ஏவிஎம் நிறுவனத்தாரும், சிவாஜி குடும்பத்தாரும் இந்த தலைப்புக்கு படம் நியாயம் செய்யும் என நம்பினார்கள்" என்றார்.
நிஜமாக அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர் பெயர் ராஜேந்திரன், அந்த பாத்திரம் தான் சிவாவா? என்று கேட்கப்பட "இல்லை. இது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற காலத்தில் ஒரு அண்ணன் - தம்பியை பற்றி சொல்லும் கதை. அதேவேளையில் உண்மையாக நடந்த சம்பவங்களை சினிமாப்படுத்தியும் இருக்கிறோம். முழுக்க புனைவு என சொல்ல முடியாது. அந்த காலகட்டத்தில் பல மாணவர்கள் இந்த இயக்கத்தில் பங்கு பெற்றனர். அவர்கள் எப்படி போராடினார்கள், அவர்களின் உணர்வுகள் என்ன? எதற்காக அவர்கள் முன்வந்தனர்? போன்றவை இருக்கும். நிஜ பாத்திரங்களில் இருந்து பெறப்பட்ட குணாதிசயங்கள் இதில் இருக்கும். இந்தப் படத்துக்கான என்னுடைய ஆலோசகர், ஆ ராமசாமி ஐயா. அன்று அவர் மதுரைக் கல்லூரியில் மாணவர். அவரிடம் பல விஷயங்கள் கேட்பேன். இன்னும் சொல்லப்போனால், அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்திடம் கூட பேசினேன். அவர் அந்த காலகட்டத்தில் சென்னையில் படித்துக் கொண்டிருந்தார்" என்று பேசியுள்ளார் சுதா கொங்கரா.

