80களின் பின்னணியில் ’மீசைய முறுக்கு 2’ | Meesaya Murukku 2 | Hiphop Tamizha
பிரபல ராப் பாடகர் ஹிப் ஹாப் ஆதி, 2015இல் சுந்தர் சி இயக்கிய `ஆம்பள' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்சியாக `இன்று நேற்று நாளை', `தனி ஒருவன்', `அரண்மனை 2' எனப் பல படங்களில் இசையமைப்பளராக பணியாற்றியவர் `மீசைய முறுக்கு' படம் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமானார்.
அதன்பிறகு `நட்பே துணை', `நான் சிரித்தால்', `சிவக்குமாரின் சபதம்', `அன்பறிவு', `வீரன்', `P T சார்', `கடைசி உலகப்போர்' போன்ற படங்களில் நடித்தார், இதில் இரு படங்களை (சிவக்குமாரின் சபதம், கடைசி உலகப்போர்) அவரே இயக்கினார். தற்போது மீண்டும் இயக்குநராக களம் இறங்குகிறார் ஆதி. கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழா கான்செர்ட்டில் `மீசைய முறுக்கு 2' படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும், இந்தப் படமும் நண்பர்களை பற்றிய கதைதான் எனவும், ஹர்ஷத் கான் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் அறிவித்தார்.
ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று `மீசைய முறுக்கு 2' படத்தின் `World of Meesaya Murukku 2' என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறொரு கதையாக உருவாக்கி இருக்கிறது குழு. 80களின் பின்னணியிலும், நிகழ்காலத்திலும் நடப்பது போன்ற ஒரு கதையாக இருக்கும் என டீசரை பார்க்கையில் புரிந்துகொள்ள முடிகிறது. சிலர், இதில் ஆதியின் தோற்றங்களைக் கேலி செய்தாலும், டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

