`சிவா உங்களுக்கு ஹீரோ ரோல் செட் ஆகாது'னு.. - சினிஷை கலாய்த்து தள்ளிய சிவா | SK | Sinish
தயாரிப்பாளர் சினிஷ் தன்னுடைய Soldiers Factory தயாரிப்பு நிறுவனம் மூலம், அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் `சூப்பர்ஹீரோ' மற்றும் பாரத் நடிக்கும் `நிஞ்சா' ஆகிய படங்களின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் பா இரஞ்சித், வெங்கட்பிரபு, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசும் போது "சினிஷுடன் இணைந்து இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்ததற்கு வாழ்த்துக்கள் சாய் பிரதர். நீங்கள் படம் எடுப்பது, அது ஹிட்டாவது எல்லாம் நடந்து விடும். ஆனால் சினிஷை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்று தான் தெரியவில்லை. அவர் எப்போதும் ஹைப்பராக இருப்பார். சினிஷிடம் முதலில் பிடித்தது, அவர் ஒரு நல்ல ரசிகர். எந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தாலும், கத்தி, ரசித்து தான் பார்ப்பார். எல்லா படத்தையும் சூப்பர் என சொல்வார். அவர் படத்துக்கு நாமும் அப்படி சொல்வோம் என நம்புகிறேன்.
சினிஷுடன் எனக்கு நட்பு என சொல்வதா, மோதல் என சொல்வதா என்று தெரியவில்லை. நான் நெல்சன் அண்ணாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்த நேரம். `வேட்டை மன்னன்' கதையை முடிவு செய்த நேரத்தில் எங்களுக்கு அலுவலகம் எதுவும் இல்லை. படத்தின் ஹீரோவும் முடிவாகவில்லை. மெரினா பீச்சில் அமர்ந்து அவர் சொல்ல சொல்ல நான் எழுத வேண்டும். அவர் சொல்லும் சில வார்த்தைகளை பீப் போட்டு எழுத வேண்டியதாக இருக்கும். பின்பு அலுவலகம் போட்ட பின்பு அருண் ராஜா வந்து சேர்ந்தான். பிறகு தான் சினிஷ் வந்தார். அப்போது அவர் என்னிடம் `நீங்கள் என்ன ஆக ஆசைப்படுகிறீர்கள் சிவா?' எனக் கேட்டார், அப்போது எனக்கு ஹீரோ ஆசை எல்லாம் கிடையாது, டிவியில் வேலை செய்து கொண்டிருந்தேன், உதவி இயக்குநராக இருந்தேன். இவரை வம்பிழுப்போம் என ஹீரோ ஆக ஆசை என்றேன். உடனே அவர் `எதுக்கு உங்களுக்கு இந்த வேலை எல்லாம், உங்கள் டைமிங் நன்றாக இருக்கிறது. காமெடி ரோல் ஆசைப்பட்டால் ஓகே' என அவர் சொன்னதும் `ஏ நாங்க எல்லாம் ஆக கூடாதா?' என்றேன். இந்த விஷயத்தை விடுவார் எனப் பார்த்தால் தொடர்ந்து `ஹீரோ எல்லாம் உங்களுக்கு செட் ஆகாது' என சொல்லிக் கொண்டே இருந்தார்.
இந்த சம்பவம் எனக்கு மறந்துவிட்டது. நான் ஹீரோவாக நடிக்க துவங்கி சில வருடங்கள் கழித்து, அவராகவே என்னை தொடர்புகொண்டு `அன்னைக்கு பேசினது எதையும் மனசுல வெச்சிக்காதீங்க' என்றார். அந்த சம்பவம் நடந்ததையே மறந்துவிட்டு, என் வேலைகளில் கவனமாக இருந்ததால் இவரிடம் பேச முடியாமல் போய்விட்டது. ஆனால் நான் இவர் மேல் கோபமாக இருப்பதாக நினைத்துக் கொண்டார். இவர் இப்படி வெளிப்படையாக பேசக்கூடியவர். அதனால் நிறைய பிரச்சனைகளும் அவருக்கு ஆகி இருக்கிறது. இன்னுமும் ஆக்கிக் கொண்டே இருக்கிறது. இந்த மாதிரி வெளிப்படையாக பேசக்கூடிய சினிஷை நீங்கள் எப்படி கையாளப்போகிறீர்கள் என்பதுதான் சவால்.
நான் கீழே அமர்ந்திருக்கும் போது நெல்சன் என்னிடம் `அதென்ன 5, 6 எனப் போட்டிருக்கிறது?' என்றார். இது ஐந்தாவது மற்றும் ஆறாவது படம் என்றேன். `முதல் நான்கு படம் எது என சொல்லவே மாட்டேங்கிறான்' என்றார். மேலும் இனி அடுத்த வருடம் இரண்டு படம், சீரிஸ் எடுக்கிறோம் என சொல்கிறான், எப்போது ரிலீஸ் என சொல்லகிறானா பார் என்றார். ஆனால் அவருடைய எனர்ஜி பற்றி சொல்ல வேண்டும். அவர் சினிமாவில் புது நபர் என நினைக்காதீர்கள், 40 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறார். அவருடன் பணியாற்றியவர்கள் இயக்குநர் ஆகி இருக்கிறார்கள், தேசிய விருது வாங்கி இருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இயக்குநர் ஆகும் நம்பிக்கை வந்தது எனக் கேட்டால் `சினிஷே ஆகிவிட்டான் நம்மால் முடியாதா என்றார்கள்'. நான் சினிஷிடம் `ஏன் நீங்கள் இப்போது இயங்குவதில்லை' எனக் கேட்பேன். `பண்ணணும்ங்க' என அவர் சொன்னதும், நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், சீரியஸா எடுத்துக்காதீங்க என சொல்வேன்.
அவர் எவ்வளவு சுதாரிப்பான ஆள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். பார்க்கிங் படம் இன்னொரு தயாரிப்பாளரான சுதனுடன் இணைந்து தான் தயாரித்தார். அதற்கான அக்ரிமெண்ட் போடும் போது, ஒருவன் எவ்வளவு நம்பிக்கை இருந்தால், இந்தப் படத்திற்கு என்ன விருது கிடைத்தாலும், நான் தான் சென்று வாங்குவேன் என சொல்லி அக்ரிமெண்ட்டில் எழுதி இருப்பார். அவார்டையே அப்படி வாங்குபவர், பணத்தை எப்படி வாங்குவார் என புரிந்து கொள்ள வேண்டும். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், இவ்வளவு நண்பர்களை அவர் சம்பாதித்து இருக்கிறார் என்பதை அவரது வெற்றியாக பார்க்கிறேன். இந்தப் படங்களின் வெற்றி விழாவில் சந்திப்போம், பார்ட்டி கொடுத்தால் சொல்லுங்கள் வந்து சைட் டிஷ் சாப்பிடுகிறேன்" என்றார்.

