`கும்கி 2' ஹீரோ இவர் தான், வில்லன் அர்ஜூன் தாஸ்? | Kumki 2 | Arjun Das | Prabu Solomon
தமிழ் சினிமாவில் `மைனா', `கும்கி' படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி பாணியில் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பிரபுசாலமன். விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவான `கும்கி' வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் பிரபு சாலமன். இப்படம் பற்றிய சில தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரபு சாலமன்.
அந்தப் பேட்டியில் இப்படத்தின் கதைக்கரு பற்றி பேசியவர், "கும்கி 2வை மேம்போக்காக ஒரு சீக்குவல் என சொல்லிவிட முடியாது. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காட்டு யானைகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழையும்போது ஏற்படும் மோதலைச் சுற்றி அமைந்திருந்த படம் கும்கி. இந்த படம் மற்றொரு கும்கியைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட கதையைச் சொல்கிறது. முந்தைய படம் பாடல்கள், காதல் மற்றும் மென்மையான விஷயங்களுடன் அமைக்கப்பட்டது. ஆனால் கும்கி 2 அனைத்து வகையான பார்வையாளர்களுடனும், குறிப்பாக குழந்தைகளையும் கவரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காதல் அறவே இல்லாமல், முற்றிலும் புதிய பார்வையை வழங்குகிறது.
"இந்தப் படம் ஒரு சிறுவனுக்கும், யானைக் கன்றுக்கும் இடையிலான நிபந்தனையற்ற பிணைப்பைச் சுற்றியதாக அமைந்துள்ளது. அவர்கள் எப்படி சந்திக்கிறார்கள், அவர்களின் பயணம் எவ்வாறு விரிவடைகிறது, அவர்களின் நட்பு என்ன சோதனைகளுக்கு ஆளாகிறது என்பதெல்லாம் தான் படத்தின் மையம். நாங்கள் யானை கன்று சம்பந்தப்பட்ட காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கினோம், அதே நேரத்தில் பெரிய யானைக் காட்சிகள் கேரளாவில், முக்கியமாக குமிலியைச் சுற்றி படமாக்கப்பட்டன." என்றார்
இப்படத்தில் அர்ஜூன் தாஸ் வில்லனாக நடிப்பதாய் சுற்றும் தகவல்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, "இது ஒரு முழு நீள வில்லன் வேடம் அல்ல. என் படங்களில், ஹீரோ அல்லது வில்லன் என்பதே இல்லை. கதாப்பாத்திரம் அனைவரும் சூழ்நிலைகளால் வடிவமைக்கப்படுவார்கள்."
படப்பிடிப்பின் போது சந்தித்த சவால்களைப் பற்றிப் பேசுகையில், “யானைகள் மக்களை சுமந்தபடி ஓடும் காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தது. அது இயற்கையாக நடக்காது, CGI பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என உறுதியாய் இருந்தோம். எனவே நாங்கள் அவற்றுக்கு பயிற்சி அளித்தோம். இந்தப் படத்தில் ரத்தம், தோட்டாக்கள், நெருப்பு அல்லது தோட்டாக்கள் எதுவும் இல்லை. நான் நேர்மையுடன், அன்பு, நட்பு, இரக்கம் மற்றும் உணர்ச்சிகளை மட்டுமே மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளேன். இந்தப் படத்திற்கு 'U' சான்றிதழ் பெற்றுள்ளோம்; இப்போதெல்லாம் 'U' சான்றிதழ் பெறுவது ஒரு பெரிய சவாலான விஷயம்”
இப்படத்தில் இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா பணியாற்றியது பற்றி கூறும் போது, “இந்தப் படத்தில் ஒரு புதிய கண்ணோட்டம் தேவைப்பட்டது. அதனால் என் பழைய குழுவுடன் பயணிக்கவில்லை. இந்தப் படத்தின் பின்னணி இசையை வடிவமைக்க, நிவாஸும் நானும் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தீவிரமாக பணியாற்றினோம். கோவிட் காலகட்டத்தை அதிகம் பயன்படுத்திக் கொண்டோம்.”
மேலும் இப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளது மதி என்ற அறிமுக நடிகர். இவரின் சிறிய வயது பாத்திரத்தில் ரோஷன் நடித்துள்ளாராம். இப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.