"எங்களுக்கு மகள் பிறந்துள்ளார்!" - அப்பாவான மகிழ்ச்சியில் ஹரீஷ் கல்யாண் | Harish Kalyan
தமிழ் நடிகர் ஹரிஷ் கல்யாண் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தனது மனைவி நர்மதாவுடன் பெண் குழந்தையை வரவேற்றுள்ளார். தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஹரிஷ், இந்த புதிய அத்தியாயத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த `ப்யார் பிரேமா காதல்' படம் பெரிய ஹிட்டானது, அதன் பின்பு `பார்க்கிங்', `லப்பர் பந்து' போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
ஹரிஷ் கல்யாண் கடந்த 2022-ம் ஆண்டு நர்மதா உதயகுமாரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தன் எக்ஸ் பக்கத்தில், ``என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் மிக அற்புதமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்... எனக் குறிப்பிட்டு தனக்கு மகள் பிறந்த செய்தியை அறிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எனது மனைவி நர்மதாவும் நானும் ஒரு பெண் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர். இந்த அழகான புதிய அத்தியாயத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்கும்போது, எங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

