” `ஹபீபி' பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது!” - பா இரஞ்சித் | Pa Ranjith | Habeebi
`அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு' போன்ற படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் தற்போது கஸ்தூரி ராஜா நடிப்பில் `ஹபீபி' என்ற படத்தை இயக்கியுள்ளார். மே 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் பா இரஞ்சித், "இந்தப் படத்தை நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். மீரா கதிரவன் அவர்களை ஓர் உதவி இயக்குநராக எழுத்தாளராக இருந்தபோது நான் அவரிடம் நிறைய அலுவலக முகவரிகளைக் கேட்டு உதவி கேட்பேன். அப்படி பல இயக்குநரைச் சந்தித்து வாய்ப்பு கேட்கச் சென்றிருக்கிறேன். அப்படித்தான் மீரா கதிரவன் எனக்குப் பழக்கம். அவர் இயக்குநர் லோகிதாஸ் உடன் பணியாற்றி இருக்கிறார். அதுவும் எனக்கு ஆச்சரயம் தரும் ஒன்று. ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன்.
இதற்கு முன்பு இப்படியான வாழ்க்கையை நெருக்கமாகப் பார்த்ததில்லை. இந்த தமிழ்ச் சமூகத்தில் பல வேறுபாடுகள் உண்டு. தனித்தனியாகப் பிரிந்தாலும் ஒரே சமூகமாக வாழ்கிறோம் என்ற மாயைக்குள்தான் நாம் வாழ்வோம். யாரும் யாருடைய வாழ்வைப் பற்றியும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களைப் பற்றி சினிமாக்கள் பேசிக்கொண்டே இருந்தன. அப்படி இருக்கும் போதுதான் நான் என்னைப்பற்றிய தேடலில் சினிமா பற்றி யோசிக்க ஆரம்பித்து இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.
சில தோழர்கள் உங்களுடைய சினிமாவில் ஏன் இஸ்லாமியர்களை, திருநங்கைகளை காட்சிப்படுத்துவதில்லை எனக் கேட்பார்கள். ஆனால், அதை ஓர் அழுத்தமாகா எடுத்துக் கொண்டு உருவாக்க வேண்டும் என நினைக்கவில்லை. மலையாளத்தில் தொடர்ச்சியாக அவர்கள் இந்தச் சமூகத்தை சினிமாவில் காட்டுவதால், ஒரு வேறுபாடு இல்லை. ஆனால், தமிழ் சினிமாவில் சிறுபான்மையினர் பற்றி சினிமாவில் காட்டுவது, அதனைச் சந்தைப்படுத்துவது போன்றவை இல்லாத நிலை இருந்தது.
’ஹபீபி’யை தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான அதிசயமாக நான் பார்க்கிறேன். கண்டிப்பாக, இது பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. சாதாரணமாக, சினிமா எடுக்கும் எந்த இயக்குநருக்கும் படம் ஓடுமா... ஓடாதா என்ற பயம்தான் இருக்கும். ஆனால், இந்த இயக்குநருக்கு கூடுதலாக நெருக்கடியை சமூகம் கொடுத்திருக்கிறது. இந்த மாதிரி சூழலில்தான் மீரா கதிரவன் இப்படி ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார்” என்றார்.

