"அந்த பாத்திரங்களில் நடித்ததை அபத்தமாக நினைக்கிறேன்!" - 15 ஆண்டு சினிமா பயணம் குறித்து சமந்தா!
சமந்தா திரையுலகில் அறிமுகமாகி, இந்த ஆண்டோடு 15 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். மாஸ்கோவின் காவிரி படம் மூலம் திரைத்துறையில் நுழைந்த சமந்தா, அடுத்து பல படங்களில் நடித்து, தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார். இப்போது தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி நடத்தி வருகிறார். இந்த பயணம் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பதினைந்து வருடங்கள்! எப்படி இருக்கிறது?
"பதினைந்து வருடங்கள் என்பது ஒரு நீண்ட காலம். அதன் சில பகுதிகள் என்றென்றும் இருப்பது போலவும், சில பகுதிகள் மங்கலாகவும் இருக்கிறது. அன்றிலிருந்து நான் வெகுதூரம் வந்துவிட்டேன். சில படங்களை நான் பார்க்கையில், நான் எவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை, ஆனால் அதுதான் நான் கற்றுக்கொள்ள ஒரே வழி. எனக்கு வழிகாட்டிகள் இல்லை. இந்த துறையில் யாரையும் தெரியாததால், நான் எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டியிருந்தது. எல்லாம் எனக்குப் புதிதாக இருந்தது, நான் வேலையின் மூலமாகவே அனைத்தையும் கற்றுக் கொண்டேன்."
உங்கள் கடந்த கால நிகழ்ச்சிகளில் எது உங்களை பயமுறுத்துகிறது?
"அது நான் பொருந்திப் போக சிரமப்பட்ட வேடங்கள் தான்... ஆரம்பத்தில், நிறைய கவர்ச்சியான பாத்திரங்களில் நடிக்கும் போது அதில் நான் என்னை உணரவில்லை. என் சகாக்களைப் போல இருக்க நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன், அவர்களைப் போல தோற்றமளிக்க, அவர்களைப் போல நடிக்க, அவர்களைப் போல நடனமாட. இப்போது திரும்பிப் பார்க்கையில், அந்த நடிப்பு முற்றிலும் அபத்தமாகத் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன்."
உங்களுடைய முதல் படப்பிடிப்பு நினைவில் இருக்கிறதா?
"அது மாஸ்கோவின் காவிரி படம், இப்போதுவரை என் நெருங்கிய நண்பராக இருக்கும் ராகுல் ரவீந்திரனுடன் நடித்த படம். அந்தப் படம் ரொம்பவே மங்கலாக நினைவில் இருக்கிறது. அதன் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிகளுக்கு இடையே நடந்ததால், எனக்கு அது அதிகம் நினைவில் இல்லை. ஆனால் என்னுடைய இரண்டாவது படமான `யே மாயா சேசாவே' படத்திலிருந்து ஒவ்வொரு ஷாட்டும் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. முதல் ஷாட், முதன் முறையாக கார்த்திக்கை கேட் அருகே சந்திப்பது. கௌதம் மேனனுடன் பணிபுரிவது அருமையாக இருந்தது, அவருக்கு என்ன வேண்டும், அந்தக் கதாபாத்திரம் எப்படி வர வேண்டும் என்பது சரியாகத் தெரியும். ஒரு கதாபாத்திரமாக மாறி வேறொருவராக நடிக்கும் அனுபவம் அதிலேயே எனக்கு முதல் முறை கிடைத்தது. அதன் பிறகு பல படங்கள் அந்த மாதிரியான ஈடுபாட்டை வழங்கவில்லை, அதனால்தான் நான் தயாரிப்பாளராக மாறியிருக்கிறேன்."
திரும்பிப் பார்க்கும்போது, கடந்த பதினைந்து ஆண்டுகளில் எதையாவது மாற்ற விரும்புகிறீர்களா?
"கடந்த பதினைந்து வருடங்களில் ஏற்பட்ட உயர்வு, தாழ்வு, சாதனைகள், வெற்றிகள் எதையும் நான் குறைத்து மதிப்பிடப் போவதில்லை. ஆனால் அடுத்த பதினைந்து ஆண்டுகள் குறித்து நான் இன்னும் உற்சாகமாக இருக்கிறேன். இப்போது நான் மிகவும் உறுதியாக உணர்கிறேன், நான் யார் என்பதில் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது பலங்களை நான் அறிவேன், எனது வரம்புகளை நான் அறிவேன், மேலும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அந்தக் கற்றல்களைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது. நான் செய்வதை உண்மையிலேயே விரும்பி செய்கிறேன். நான் இப்போது பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்கிறேன், ஆனால் அவை எதிலும் மன அழுத்தத்தை உணரவில்லை. உண்மையில், கடந்த பதினைந்து வருடங்களாக நடிப்பு என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்யும் போது இருந்த மன அழுத்தத்தை விட, இன்று பதினைந்து வெவ்வேறு விஷயங்களை நிர்வகிப்பதில் இருக்கும் மன அழுத்தம் குறைவே." என்றார்.
சமந்தா அடுத்ததாக நந்தினி ரெட்டி இயக்கத்தில் `மா இன்டி பங்காரம்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தாக ராஜ் & டிகே இயக்கத்தில் `Rakt Brahmand: The Bloody Kingdom' என்ற வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்.

