27 வருடங்களை நிறைவுசெய்த சேனாபதி - ‘இந்தியன் 2’ படம் குறித்து அப்டேட் கொடுத்த படக்குழு!

கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில் தயாராகி வரும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Kamal Haasan-Shankar
Kamal Haasan-Shankar@shankarshanmugh twitter

தந்தை - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு, கடந்த 2019-ம் ஆண்டு முதல் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். லைகா புரொடெக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்து வந்தது.

இந்தியன் 2
இந்தியன் 2Movie poster

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்தால் உயிர் பலி, கொரோனா ஊரடங்கு, இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனம் லைகாவிற்கும் இடையேயான கருத்து வேறுபாடு உயர்நீதிமன்றம் வரை சென்றது என பல பிரச்னைகள் படப்பிடிப்புக்கு இடையூறாக வந்தன. இதனால் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நின்று போனது.

இதற்கிடையில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஆரம்பித்து அந்தப் படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பிளாக் பஸ்டர் அடித்தது. அதேவேளையில், இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்க சென்று விட்டார். மேலும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வந்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகிய இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு உயிரிழந்து விட்டனர். இதனால் ‘இந்தியன்-2’ படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ‘விக்ரம்’ பட வெற்றியால் பிரச்னைகள் சீர்செய்யப்பட்டு மீண்டும் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடந்து வந்தது.

‘இந்தியன்-2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடத்தப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தக்கட்டமாக இன்று முதல் ‘இந்தியன்-2’ படத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் ஷங்கர் ட்வீட் செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முக்கியமான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்ட நிலையில், ‘இந்தியன்-2’ திரைப்படமும் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதற்கிடையில், ‘இந்தியன்’ திரைப்படம் கடந்த 1996-ம் ஆண்டு மே 9-ம் தேதி வெளியாகி, நேற்றுடன் 27 வருடங்களை நிறைவுசெய்ததை முன்னிட்டு லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், சேனாபதி (தந்தையாக நடித்த கமல்ஹாசனின் கதாபாத்திரம்) திரையில் பார்த்து 27 வருடங்கள் ஆகிறது என்றும், விரைவில் அவர் நம்மை கவர வருவார் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் ‘இந்தியன்-2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா (சமீபத்தில்) ஆகியோர் இந்தப் படத்தில் கனமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால், அவர்களின் போர்ஷன் மிகவும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com