"நீங்க லோகேஷ் அண்ணாவோட வர்றவர்ல"னு சொல்லும் போது - ரத்னகுமார் | 29 | Rathna Kumar
`மேயாதமான்', `ஆடை', `குலுகுலு' படங்களுக்கு பிறகு ரத்னகுமார் இயக்கும் படம் `29'. விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் போன்றோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய ரத்னகுமார் "29வது வயது பற்றி எல்லோரும் நிறைய சொன்னர்கள். என்னுடைய 29 வயது என்பது எனக்கு தற்கொலை எண்ணம் வந்த வயது. அதிலிருந்துதான் நான் நேர்மறை எண்ணம் கொண்டவனாக மாறினேன். சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என HCLல் வேலையை விட்டுவிட்டு வந்தேன். அதிலிருந்து 12 வருடங்கள் கழித்துதான் என் பெயரை திரையில் பார்த்தேன். அப்போதுதான் 29 வயதை நெருங்கும் நேரம், வீட்டில் கல்யாணம் செய்ய சொல்லி அழுத்தம். 30 ஆகிவிட்டால் திருமணம் நடப்பது கடினம் ஆகிவிடும். இப்போதெல்லாம் இளைஞர்கள் வந்துவிட்டார்கள் என ஸ்க்ரிப்ட் ரிஜெக்ட் ஆகும். 29 வயதில் நடந்த இன்னொரு விஷயம், லோகேஷ் என்ற நண்பன் கிடைத்ததும்.. இப்போது வரை நான் வளர காரணமும் லோகேஷ்.
நான் `மது' என ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். அதை காட்டிவிட்டு என்னுடைய கதையை கூறுவேன். எல்லோரும் அழுவார்கள், கட்டிப்பிடிப்பார்கள். ஆனால் இதை ஏன் முதல்படமாக செய்கிறீர்கள்? மது மாதிரி கதையை நீங்கள் எளிமையாக எழுதிவிடலாம், ஜாலியான படம் எடுங்கள் என்பார்கள். இதை 45 பேர் சொன்னார்கள், 46வது ஆளாக கார்த்திக் சுப்புராஜும் சொன்னார். அவர் தான் அந்த குறும்படத்தை 6 குறும்படங்களுடன் சேர்த்து திரையரங்கில் வெளியிட்டார். அதை பார்த்த ஒரு பத்திரிகையாளர் `நீ டைரக்டர் ஆகிடுவ' என சொன்னார். அதுதான் எனக்கு முதல் அங்கீகாரம். மேலும் கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் நானே என் முதல் கதையை ரெண்டாவதாகதான் செய்தேன் என சொன்னார். அதுதான் மது - மேயாதமான் ஆக காரணம்.
`ஆடை', `குலுகுலு' எடுத்த போதெல்லாம் பாராட்டு கிடைத்தது அரிதானது. எப்போதாவதுதான் எனக்காக என்னை பெற்றவர்கள் பார்ப்பார்கள். அதற்கு காரணமும் நான் தான். ஒரு கட்டத்திற்கு மேல் யாராவது என்னை பார்த்தார்கள் என்றால், `நீங்க ரத்னா தானே, நானும் விஜய் அண்ணா ஃபேன் தான், அவரை கேட்டதா சொல்லுங்க' என்பார்கள், `நீங்க லோகேஷ் அண்ணாவோட வர்றவர்ல, அவரோட ஃபிரெண்டு தான' எனக் கேட்பார்கள். என்னை எப்போதுதான் கேட்பார்கள் எனத் தோன்றும். சரி அது போகட்டும் என என் புகைப்படத்தை இன்ஸ்டாவில் போட்டால் `யோவ் மதன் கௌரி நீ எங்க இங்க' எனக் கேட்பார்கள். நம் முகத்தை பார்த்தால் கூட நாம் தெரிய மாட்டோம் போல என நினைத்தேன். எனவே நான் யார் என கேட்க வேண்டும் என தோன்றியது.
ஏன் 29, எனக் கேட்டால் முன்பு சொன்னது போல எனக்கு மிக மோசமான எண்ணம் வந்தது. அப்போதுதான் ஒரு நண்பரின் பரிந்துரையின் பெயரில் மன அமைதிக்காக மாலை போட்டேன். இது என்னுடைய பத்தாவது வருடம். மலைக்கு செல்லும் போது நெடுதூரம் ஏற வேண்டி இருக்கும், கொஞ்சம் இறக்கம் வந்தால் நன்றாக இருக்குமே என யோசித்தால் இறக்கமும் வரும், அதுவும் கடினமாக இருக்கும். சமதளத்தில் நடக்கவும் கடினமாக இருக்கும். எல்லாமே கடினமாகதான் இருக்கும் என்பதை அந்த மலை எனக்கு கற்றுத்தந்து" என்கிறார்.

