'கொடி கோட்டைக்குச் செல்லுமா? தனுஷ் கொடி சர்ச்சைக்கு பதில் சொன்ன சுப்ரமணிய சிவா! | Dhanush
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள, `அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய சுப்ரமணிய சிவா சமீபத்தில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் கொடி அறிமுகம் செய்யப்பட்டது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அவர் பேசியபோதட், "இந்தக் கொடி 15 வருடங்களாக எங்களிடம் இருக்கிறது. எந்தப் படம் வெளியானாலும் இதில்தான் தோரணம் கட்டுவோம். அதேபோல தனுஷ் ரசிகர்கள் வீட்டில் கல்யாணம், காதுகுத்து நடைபெற்றாலும் அந்தக் கொடியைத்தான் தோரணம் கட்டுவார்கள். சமீபத்தில் ரசிகர்கள் சிலர் அதை காரில் மாட்டுவதுபோல தயார்செய்து எடுத்து வந்தனர்.
வருடம்தோறும் மாவட்டத் தலைவர்கள், பொருளாளர், அமைப்பாளர்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்துவோம். பதிவுகள் புதுப்பித்தல், புது மன்றங்களில் என்ன செய்ய வேண்டும் எனப் பல வேலைகள் அதில் நடக்கும். அதைதட்தான் இந்த வருடம் நடத்தினோம். அதில் சிலர் காரில் மாட்டுவதுபோல அந்தக் கொடியை எடுத்து வந்தனர். அதைச் சிலர் காரில் மாட்டிவிட்டோம். இதனைப் புதிய கொடி அறிமுகம் என்பதுபோல தகவல் பரப்பிவிட்டனர். அது எங்களிடம் ஏற்கெனவே இருக்கும் கொடிதான்.
மேலும் இதில் உள்ள நட்சத்திரம் பற்றி கேட்கிறீர்கள், ’சூரியனே ஒரு ஸ்டார்தான். ஒவ்வொரு மனிதனும் ஸ்டார் ஆகவேண்டும், ஒவ்வொரு மனிதனும் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்ற அடையாளம்தான் அது’. அமெரிக்க கொடியில்கூடத்தான் ஸ்டார் இருக்கிறது. ஸ்டார் என்பது வெளிச்சத்தை, வெற்றியை குறிப்பது தான்" என்றவரிடம், ”இந்தக் கொடி எப்போது கோட்டைக்கு போகும்” என்ற கேள்வி கேட்கப்பட "எது எப்போது நடக்குமோ, அது அப்போது நடக்கும்" என்றார் சுப்ரமணிய சிவா.

