RIP Bonda Mani | பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

போண்டா மணியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் வீடு திரும்பினார். வறுமை காரணமாக வேறு வழியின்றி மீண்டும் சின்ன சின்ன படங்களில் நடித்துவந்தார்.
போண்டா மணி
போண்டா மணிபோண்டா மணி

செய்தி : Arun Leon

பிரபலமான நகைச்சுவை நடிகர் போண்டாமணி (வயது 65) உடல் நலக்குறைவால் நேற்று இரவு 10.30 மணியளவில் காலமானார். இலங்கையில் இருந்து சென்னை வந்த போண்டா மணி 1991ம் ஆண்டு பவுனு பவுனுதான் என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தனியாகவும், வடிவேலுவின் காமெடி குழுவோடு சேர்ந்து என இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

வடிவேலுவுடன் ஓரிரு காட்சிகளில் வந்தாலும், அந்தக் காட்சியை தன்னாலான மட்டும் சிறப்பாக மாற்றும் வகையில் வல்லமை பெற்றவர் போண்டா மணி. ' அடிச்சும் கூட கேட்பாங்க சொல்லிடாதீங்க' ; ' என்ன அண்ணே தக்காளிச் சட்னிய மூஞ்சில கொட்டி வச்சு இருக்கீங்க' ; ' பாஸ் நீங்க சீப்பா போட்ட பிளான சீப்பாலயே முடிச்சேன் பாத்தீங்களா' என வடிவேலுவுடன் அவர் நடித்த சில காமெடி துணுக்குகள் ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் பிடித்தவை.

இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்தது, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என ஊடகங்களில் செய்திகள் பரவ, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மேற்பார்வையில் முறையான சிகிச்சையும் பிரபலங்களின் பண உதவிகளும் கிடைக்க பெற்றது. இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் வீடு திரும்பினார். வறுமை காரணமாக வேறு வழியின்றி மீண்டும் சின்ன சின்ன படங்களில் நடித்துவந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவசியமான நிலையில் கடந்த ஒரு வருடமாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் மட்டும் செய்துகொண்டே, படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

நேற்று காலை டயாலிசிஸ் செய்து வீடு திரும்பிய போண்டாமணிக்கு இரவு 10.30 மணி அளவில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சுய நினைவை இழந்த மயங்கி விழுந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்க்கையில் உயிர் பிரிந்தது தெரியவந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

போண்டா மணிக்கு பள்ளிக்குச் செல்லும் வயதில் ஒரு மகனும், கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com