அவரின் திரைப்படங்கள் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டது! - சிரஞ்சீவி | Chiranjeevi | Bharathiraja
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலித்தி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல் பதிவிட்டுள்ளார். இப்பதிவில் "இந்தியத் திரையுலகம் தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்துவிட்டது.
கிராமத்து மண்ணின் மணம், மனித உறவுகளின் அழகு, காதலின் தூய்மை மற்றும் சாமானிய மக்களின் உணர்வுகள் ஆகியவற்றை அவர் காலத்தால் அழியாத திரைக்கவிதைகளாக மாற்றினார். அவரது திரைப்படங்கள் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டதோடு, பல தலைமுறைத் திரைப்படப் படைப்பாளிகளுக்கு உத்வேகமாகவும் அமைந்தன. மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது மற்றும் பல தேசியத் திரைப்பட விருதுகளை வென்ற பாரதிராஜா அவர்களின் இந்தியத் திரையுலகப் பங்களிப்பு அளப்பரியது.
'ஆராதனை' (Aradhana) திரைப்படத்தில் 'புலி ராஜு' (Puliraju) என்ற கதாபாத்திரத்தில் அவரது இயக்கத்தில் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சினிமா மீதான அவரது தீராத ஆர்வம், எளிமை மற்றும் தனது கலைப்பணியின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை என் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் நம்மிடையே இல்லையென்றாலும், அவரது அற்புதமான திரைப்படங்கள் வாயிலாக அவரது கலை வாரிசு என்றென்றும் நிலைத்திருக்கும். `இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களே, அமைதியில் துயில்கொள்ளுங்கள். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

