பாரதிராஜாவுக்கு நாளை தேனியில் இறுதிச்சடங்கு! - வைரமுத்து தகவல் | Bharathiraja
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகும் அரசியல் வட்டாரமும் அஞ்சலி செலுத்தி வருகின்றன. பாரதிராஜா உருவாக்கிய கலைஞர்கள் பலர் இன்று முன்னணியில் உள்ளனர் என வைரமுத்து கூறினார். குடும்பத் தீர்மானப்படி, அவர் பிறந்த தேனி மாவட்ட பண்ணையில் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் அடக்கம் செய்யப்படுகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலித்தி வருகின்றனர். பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த வைரமுத்து பேசிய போது "இன்றைக்கு திரையுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற பல கலைஞர்கள் பாரதிராஜாவால் உருவாக்கப்பட்டவர்கள், அல்லது பாரதிராஜாவின் உந்து சக்தியால் தங்களை தாங்களே உருவாக்கி கொண்டவர்கள்.
அவரது புகழ் காலமெல்லாம் நின்று நிலைப்பதற்கு இந்த நாட்டு மக்களும், ரசனையும் தொடர்ந்து துணை நிற்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நேரத்தில் பாரதிராஜா அவர்களின் இறுதிச்சடங்கு எங்கு நடைபெறும் என்பதை குடும்பத்தலைமை தீர்மானித்திருக்கிறது. பாரதிராஜாவின் குடும்பத்தார், பாரதிராஜா அவர்களை அவர் பிறந்த மண்ணில், அடக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது.
எந்த மண்ணில் அவர் முதல் தண்ணீர் குடித்தாரோ, எந்த மண்ணின் காற்றை அவர் சுவாசித்தாரோ, அந்த மண்ணின் படுக்கையில் அந்த மகா கலைஞன், தன் கடைசி படுக்கையை தேடிக் கொள்ள போகிறார். நாளை தேனி மாவட்டத்தில் அவரது பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பிற்பகல் 3 மணி அளவில் அடக்கம் நடைபெறும் என்பதை குடும்பத்தாரின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

