Arun Prabhu
Arun PrabhuSakthi Thirumagan

"எல்லா சாட்சியங்களும் உள்ளன.." சக்தித் திருமகன் சர்ச்சைக்கு அருண் பிரபு விளக்கம் | Sakthi Thirumagan

ஒரு படத்தை எடுப்பது மிக மிக கடினம். அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக மிகக் கடினம். இதையெல்லாம் தாண்டி இது போன்ற சதி அவதூறுகளைச் சமாளிப்பது மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
Published on

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் `அருவி', `வாழ்' படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான படம் `சக்தித் திருமகன்'. இந்தப் படம் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்டோபர் 24ஆம் தேதி வெளியானது. சமூகத்தில் இருக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இருந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் கதை தன்னுடைய கதை என சுபாஷ் சுந்தர் என்பவர் பதிவிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், `சக்தித் திருமகன்' பட இயக்குநர் அருண் பிரபு தனது சமூக வலைதள பதிவில் "மிகவும் தவறான அவதூறு. சொந்த உழைப்பில் பல வருடங்கள் உழைத்து எழுதியது. நன்றி வணக்கம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றை அளித்து, அதற்கான மின்னஞ்சல் இணைப்பையும் பதிவிட்டுள்ளார் அருண் பிரபு. அதில் "பல வருட உழைப்பிற்குப் பின் இது போன்ற அவதூறுகள் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. முதலில் செய்தியைக் கேட்டதும், இது வெறும் online troll, விட்டுவிட வேண்டும் என்றுதான் தோன்றியது. பல முன்னணி ஊடகங்கள் இதை post செய்யம் போதும், பலர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதை ஒட்டியும் இதைத் தெளிவு படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

2014ல் இருந்தே எழுதப்பட்ட கதை தான் சக்தித் திருமகன், பராசக்தி என்ற தலைப்பில் கிட்டு என்ற கதாபாத்திரமும், அவன் secretariat தரகர் வேலையில் ஈடுபடுபவன் என்பதும், பெரியாரிஸ்ட் சுவரெழுத்து சுப்பையாவின் வளர்ப்பில் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் மக்களைக் கேள்வி கேட்க தூண்டுகிறான் என்பதும், எட்ட முடியாத இடத்தில் இருக்கும் ஒரு பலம் பெற்ற வில்லனும் அப்போதே எழுதப்பட்டது. காலசூழலுக்கேற்ப அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப திரைக்கதையை முடித்து பல போராட்டங்களுக்குப் பின் இன்று தான் 2025-இல் அது மக்களிடம் சென்றடைந்திருக்கிறது.சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் சக்தித் திருமகன் திருட்டுக் கதை எனவும் அது 2022லேயே எழுதப்பட்ட இன்னொருவரின் கதை என்றும் யாரோ சொல்லியிருக்கிறார். மேலும் அவர் 2022-இல் டிரீம் வாரியர் பிக்சர்ஸ்க்குக் கொடுத்த synopsis-ஐ திருடி எழுதப்பட்டதே சக்தித் திருமகன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு.

2014 ஆம் வருடத்திலிருந்து இத்திரைக்கதை தொடர்பாக என்னிடம் எல்லா சாட்சியங்களும் உள்ளன. மின்னஞ்சல் பகிர்வுகள், தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு அனுப்பிய திரைக்கதைப் பகிர்வுகள், பதிவுச் சான்றிதழ்கள், வீடியோ ஆடியோ recordings முதலிய ஆவணங்கள். நான் திரைத்துறையில் இந்தக் கதையைப் பல காலகட்டங்களில் narrate செய்த முன்னனி நடிகர்கள், என்னுடன் பணியாற்றிய நண்பர்கள் என்று பலருக்கு இது நன்கு தெரியும். இவை அனைத்துமே 2022ற்கு முன்பே நடந்தவை. அனைத்திற்கும் அனைவரிடமிருந்தும் சாட்சிகள் உள்ளன.

ஒரு படத்தை எடுப்பது மிக மிக கடினம். அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக மிகக் கடினம். இதையெல்லாம் தாண்டி இது போன்ற சதி அவதூறுகளைச் சமாளிப்பது மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மேற்கொண்டு இதில், தெளிவோ ஆதாரங்களோ வேண்டுமெனில் தேவையான முறையான இடத்தில் மட்டுமே சமர்பிப்பது நன்று என்று தோன்றுகிறது. மக்களும், பத்திரிக்கை/ ஊடக/ சமூக வலைத்தள நண்பர்களும் என் தரப்பு கருத்தினை அறிந்து கொள்ளவே, இப்பதிவு. இந்த சர்ச்சை பதிவுகளுக்கும் சதி அவதூறுகளுக்கும் முற்று புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இன்னொருவர் கதையை/ திரைக்கதையைத் திருடி எழுத வேண்டிய இயலாமை எனக்கில்லை. தொடர்ந்து ஆதரிப்போருக்கு நன்றி. பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. எங்கள் படத்தை ஹாட் ஸ்டார் தளத்தில் கண்டு உங்கள் ஆதரவை கொடுங்கள். நன்றி. வணக்கம்"
எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com