"எனக்கு நிச்சயதார்த்தம்.. திருமண ஏற்பாடுகளா?" - அர்ஜூன் தாஸ் விளக்கம் | Arjun Das | Con City
அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `கான் சிட்டி'. இப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அர்ஜூன் தாஸ், “நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த கருத்துகள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்.
இது குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும். இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான, நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது. கடன்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கைச் சவால்கள் எனப் பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவை, குடும்பம், உணர்வுபூர்வம் என பலவிதமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய இயக்குநர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களைத் தருகிறது. அதனால் இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய தனது திருமணச் செய்திகள் குறித்த கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்தவர், “எங்கிருந்து அந்தச் செய்தி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. வீட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும் இல்லை. அப்படி எதிர்காலத்தில் ஏதாவது நடந்தால் இதுபோல செய்தியாளர் சந்திப்பு வைத்துக் கூறுவேன். திரையரங்குகளுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திக்கும்போது, குறிப்பாக குடும்ப ரசிகர்களும், மூத்த பெண்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் தற்போது குடும்ப ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளையும் அதிகமாகத் தேர்வு செய்து வருகிறேன்." என்றார்.
தான் நடித்த வில்லன் வேடங்கள் மக்களால் விரும்பப்படுவது பற்றி கூறுகையில், “நான் நடித்த பல நெகட்டிவ் கதாபாத்திரங்களைப் பார்த்தால், அவர்கள் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். கைதியில் தன் சகோதரனுக்காகச் செய்கிறான், GBUவில் தனது கடந்தகால காயங்களால் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அதனால் பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரங்களை வெறுப்பதைவிட புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அதுவே அவர்களுடன் ஓர் இணைப்பை உருவாக்குகிறது. ஒரு நல்ல எதிர்மறை கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாகச் செய்வேன். ஆனால், தற்போது அப்படிப்பட்ட எந்த திட்டமும் கைவசம் இல்லை. கதையும், கதாபாத்திரத்தின் ஆழமும் முக்கியம். எனக்கு மிகவும் பிடித்த திரை வில்லன், உலக சினிமாவில் ஹீத் லெட்ஜர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானது. தமிழ் சினிமாவில் ’தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சுவாமி ஏற்றிருந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வில்லன் வேடம்" என்றார்.

