ரன்வீர் சிங்குக்காக விட்டுக் கொடுத்த அஜித்... ராகுல் சொன்ன சம்பவம்! | Ajith | Ranveer Singh | Raahul
தமிழ் சினிமா விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ராகுல், அஜித் எவ்வளவு பணிவானவர் என்பதை ராமோஜி ஃபிலிம் சிட்டி சம்பவம் மூலம் விளக்குகிறார். அஜித்துக்காக ஒதுக்கப்பட்ட அறையை, பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் கேட்டபோது, RFC மேனேஜர் தயக்கத்துடன் ராகுலிடம் உதவி கேட்கிறார். தகவலை கேட்ட அஜித், எந்த அலட்டலும் இல்லாமல் அறையை விட்டுக் கொடுத்து, சாதாரண அறையில் தங்கி தனது எளிமையை நிரூபித்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ராகுல், இப்போது ரவி மோகன், விக்ரம் பிரபு, ஆகாஷ் முரளி போன்றோர் நடிப்பில் படங்களை தயாரிக்கிறார். இவர் அஜித் நடித்த சில படங்களையும் விநோயோகித்துள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் நடிகர் அஜித் பற்றி கூடிய விஷயம் கவனம் பெற்றுள்ளது.
அந்தப் பேட்டியில் அஜித் எவ்வளவு பணிவான நபர் என்று கேட்கப்பட, அதற்கு பதில் சொன்ன ராகுல் "ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. அப்போது அஜித் சாருக்கு எப்போதும் கொடுக்கும் அறையை கொடுத்தார்கள். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வந்தால் அவரும் அதே அறையை தான் கேட்பாராம். அப்போது என பார்த்து திடீரென ரன்வீர் சிங் பட ஷூட் ஒன்றை அங்கு திட்டமிடுகிறார்கள். அவர் வழக்கமாக தங்கும் அறையை கேட்கிறார். ஆனால் அது இப்போது அஜித் சாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
RFC மேனேஜர் அஜித் சாரிடம் சொல்வதற்கு தயங்கி, என்னிடம் வந்து கோரிக்கையாக கேட்கிறார். "ரன்வீர் சிங் படத்துக்கு பெரிய செட் எல்லாம் போட்டுவிட்டார்கள். அந்த இயக்குநரும் மிகவும் தாழ்மையாக கேட்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உங்களால் அஜித் சாரிடம் விட்டுக் கொடுக்க சொல்ல முடியுமா?" எனக் கேட்டார். உடனே நான் என்னால் அறையை காலி செய்ய சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் இந்த தகவலை என்னிடம் சொன்னீர்கள் என நான் அவரிடம் சொல்லி விடுகிறேன் என்றேன்.
அஜித் சாரிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட்டு, காலி செய்ய முடியாது என நான் சொல்லிவிட்டேன் சார் என்றேன். உடனே அவர் "இதில் என்ன இருக்கிறது, அவர் வந்து தங்கட்டும்." என்று சொல்லி கையேடு பொருட்களை எடுத்துக் கொண்டு காலி செய்துவிட்டார். சரி வெளியே ஏதாவது பெரிய ஹோட்டலில் ரூம் போடலாம் என சொன்னாலும் கேட்காமல் நாங்கள் தங்கி இருந்த பகுதியில் அவர் ஒரு அறை எடுத்துக் கொண்டு தங்கினார். இது போல பல விஷயங்களை எந்த அலட்டலும் இல்லாமல் செய்வார்." என்றார்.

