`சூது கவ்வும்'ல அந்த சீன் எடுக்க அஜித் சார் தான் காரணம்! - கருணாகரன் | Soodhu Kavvum | Ajithkumar
மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள GDN படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் தொடர்பான பேட்டிகளை அளித்து வருகிறது படக்குழு. படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ள கருணாகரன் சூது கவ்வும் படத்தின் முக்கிய காட்சி ஒன்றை எடுக்க அஜித்குமார் தான் காரணம் என்பதை பகிர்ந்து கொண்டார்.
அது பற்றி கூறுகையில் "சூது கவ்வும் படத்தில் வரும் ஹெலிகாப்டர் கேமரா ஒளிப்பதிவாளர் அரவிந்த் சார் வடிவமைத்தது தான். படப்பிடிப்பிலும் அவர் தான் வந்து ஹெலிகாப்டரை இயக்கி கொடுத்தார். இந்த காட்சி குறித்து சொன்ன போது `என்னப்பா விளையாடுறீங்களா, 30 ஆயிரம் தான் பட்ஜெட், 50 கிலோ வெயிட் தூக்கணும், அதில் கேமராவும் இருக்கணும்னு சொல்றீங்க. கிளம்புங்க' என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு படப்பிடிப்புக்கு வந்த போது தான் ஏன் இதற்கு ஒப்பு கொண்டேன் என்பதை சொன்னார்.
அஜித் சார் தான் அவரிடம் `பாவம் புது பசங்க, பட்ஜெட் எல்லாம் பெரிதாக இருக்காது ஹெல்ப் பண்ணுங்க' என்று சொன்னதாக கூறினார். அந்தக் காட்சி எடுக்கும் போது சிறப்பான அனுபவமாக இருந்தது. ஹெலிகாப்டர் பிளேடு மிகவும் கூறானது. அருகில் வந்தால் கையே ரெண்டாக போய்விடும். எல்லோரும் தூரமாக போய்விடுங்கள். காருடைய கதவையே வெட்டிவிடும் என எச்சரித்து, பின்னர் எடுத்துக் கொடுத்தார்." என்றார் கருணாகரன்.

