"Shooting Spot-ல் ஷாலினிக்கு Propose செய்த அஜித் சார்.." - சரண் சொன்ன Flashback | Ajith | Shalini
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதிக்கு இன்று திருமண நாள் என்பதால், அதனை முன்னிட்டு அவர்கள் இணைந்து நடித்த `அமர்க்களம்' படத்தினை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். அப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு இயக்குநர் சரண் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, அஜித் - ஷாலினி காதலை நேரடியாகப் பார்த்தது பற்றி பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, "இந்தப் படத்தைத் துவங்கி தியேட்டரில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பக்கம் ஷாலினி மேடம், இன்னொரு பக்கம் அஜித் சார் நின்று கொண்டிருந்தார்கள். அதுதான் படத்தின் முதல் ஷெட்யூல். அஜித் சார் முதலில் எனக்கு விட்டுவிட்டுத்தான் தேதிகள் தருவதாகச் சொன்னார். ஆனால் இந்தப் படப்பிடிப்பு துவங்கிய பின்னர், `உங்களுக்கு மொத்தமாகவே தேதிகளைத் தருகிறேன் எனச் சொன்னார். விரைவாக இந்தப் படத்தை எடுத்து முடித்துவிடுங்கள். இல்லை என்றால் இந்த பொண்ணை (ஷாலினி) நான் லவ் பண்ணிடுவேனோ என பயமாக இருக்கிறது' எனச் சொன்னார் அஜித் சார்.
அதைக் கேட்டு வெட்கத்தில் ஷாலினி முகம் சிவந்துபோனது. அது கிட்டத்தட்ட ஒரு ப்ரபோசல்தான். படக்குழு எல்லோரும் ஷூட்டிங் செய்ய தயார் செய்துகொண்டிருந்தார்கள். இந்த ப்ரபோசலை நான் மட்டும்தான் பார்த்தேன். பின்னர் அந்தக் காதல் உயிர் பெற்றது.
மேலும் அஜித் - ஷாலினி இடையே நடந்த காதல் உரையாடல் ஒன்றை அவர்களுக்கே தெரியாமல் ஷூட் செய்து அதனைப் படத்தின் இரண்டு இடங்களில் பயன்படுத்தினோம். அது எந்த இடம் என படம் பார்த்து கண்டுபிடியுங்கள். ஆனால் அதைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அஜித் சார் பார்க்கையில் வாசு என்கிற பாத்திரமாக இல்லாமல் அஜித் சாராகவே இருப்பார்" என்றார்.

