விவாதத்தை கிளப்பிய அஜித் பேட்டி | “அரசியல் புரிதலே இல்லாத பேச்சு.. ஆனா விஜய்..” - சுகுணா திவாகர்!
அஜித் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் அரசின் பொறுப்புகள் மற்றும் இலவசங்கள் குறித்து பேசினார். அரசியல் புரிதல் இல்லாமல் அவர் கூறிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியது. அரசின் முதன்மை நோக்கம் மக்களின் நலத்திட்டங்களை இயற்றுவதில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர் முன்வைத்த கருத்துகளை இங்கே பார்க்கலாம்
சமீப காலமாகவே அஜித் குமாரின் பக்குவமான அணுகுமுறை அவரது ரசிகர்களை தாண்டியும் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக மாறி வந்திருக்கிறது. ரசிகர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தமாட்டேன் எனக் கூறி ரசிகர் மன்றங்களை கலைத்தது உட்பட பல முடிவுகளை எடுத்து வந்த அவர், தற்போது ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை சொல்லி வருகிறார். அத்துடன், அஜித் குமார் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் பேசப்பட்ட பல விஷயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், இலவசங்கள் என பல விஷயங்களை நேரடியாக பேசியிருக்கிறார்.
குறிப்பாக, “நாட்டை நிர்வாகம் செய்வதுதான் அரசின் முதன்மை பொறுப்பு. அதனிடமிருந்து நாம் இலவசங்களை எதிர்பார்க்கிறோம். அதற்கு கஜானாவில் பணம் எங்கே இருக்கும்? அரசியல் என்பது கடினமான வேலை என்று கருதுகிறேன். உலகில் எந்தவொரு அரசிடமோ, அரசியல்வாதிகளிடமோ மந்திரக்கோல் கிடையாது. ஆனால் நாம் அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதாக கருதுகிறேன். நமக்கான தேவைகளை அரசிடம் எதிர்பார்ப்பது நியாயமான விஷயம். ஆனால் எப்போதும் அரசிடம் எதிர்பார்க்க முடியாது” என்று அஜித் குமார் பேசிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது.
அஜித்குமார் பேசிய கருத்துகள் குறித்து பத்திரிகையாளர் சுகுணா திவாகர் அளித்த பதில்களை இங்கே காணலாம்...
நடிகர் அஜித் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் பேசிய போது அரசாங்கத்தின் பங்கை குறைத்தும், மக்கள் அரசாங்கத்திடம் கேட்பதை தவறு என்பது போலவும் பேசியிருக்கிறார். இலவசங்கள் தவறு என்றும் நேரடியாக பேசியிருக்கிறார். இது குறித்தான உங்களின் பார்வை?
அரசியல் புரிதல் இல்லாமலேயே நடிகர் அஜித் இவ்வாறு பேசியிருக்கிறார். அரசு என்பது மக்களுக்கு அப்பால் உள்ளது என்ற நோக்கில் இருக்கிறார். பொது புத்தியில் இருந்து ஒன்றை பேசுவார்கள் இல்லையா? மக்களுக்கு இலவசங்களை கொடுப்பது தவறு. இலவசங்களினால் நாடு சீரழிந்துவிட்டது என்று பேசுவார்கள். அவர்களில் பார்வையிலிருந்தே அஜித்தும் பேசியிருக்கிறார். ஆனால், அரசு என்பது மக்களின் வரிப்பணத்திலிருந்தே நடக்கிறது. அப்படி இருக்கையில், மக்களுக்கான நலத்திட்டங்களை இயற்றுவதே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். அதை தான் நாம் 'மக்கள் நல அரசாங்கம்' என்று கூறுகிறோம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நீதிக்கட்சிக் காலத்தில் இருந்தே, மக்கள் நலத் திட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது. உதரணமாக, பள்ளிகளில் சத்துணவுத் திட்டம், இலவச பஸ்பாஸ் திட்டம், பெண்களுக்கான உதவித்தொகை போன்றவை. ஆனால், இவற்றை செலவு என்று பார்ப்பது தவறு. இது சமூக முதலீடு. இந்த சமூக முதலீட்டின் காரணமாகவே இன்று கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அரசியல் புரிதல் அஜித்துக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. அதனாலேயே, அரசு ஏன் மக்களுக்கு இவ்வளவு பண்ணனும்; அரசு வேறு மக்கள் வேறு என்ற வகையில் பேசுகிறார். அது அடிப்படையில் தவறான விஷயம்.
கரூர் துயர சம்பவத்தில் ரசிக மனப்பான்மையை விமர்சித்து அஜித் பேசியிருக்கிறாரே?
கரூர் சம்பவத்தை பற்றி பேசும்போது விஜயின் பெயரையே அவர் குறிப்பிட்டுப் பேசவில்லை. குறிப்பிட்ட நபர் என்றே கூறுகிறார். எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றே கூறியிருக்கிறார். மேலும், பல துறைகள் இருக்கும் போது சினிமா நடிகர்களுக்கு மட்டும் கூட்டம் கூடி ஏன் இப்படி நடக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், அவர் கூறியபடி பார்த்தாலே சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றபோது, அதனை கொண்டாட அந்த அணியின் ரசிகர்கள் ஒரே இடத்தில் குவிந்து கூட்ட நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்திருந்தனர். மேலும், பல மத விழாக்களிலும் கூட்டநெரிசல் காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, தமிழகத்தில் மகாமகம் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் காரணமாக இறந்துள்ளனர். கும்பமேளா நிகழ்ச்சியின் போது உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இது விபத்து.
அதே நேரத்தில் விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை, சினிமாகாரராகவே இருக்கிறார். சினிமா நட்சத்திரத்தை பார்க்க விரும்புவது போலவே, மக்கள் கூட்டம் கூடுகின்றனர் என்பதை குறிப்பால் அஜித் உணர்த்துகிறார். அது ஒரு சரியான விஷயம். தொடர்ந்து, நடிகர்களின் வேலை நடிப்பது தான். அது அவர்களின் தொழில். அதற்காக, கூட்டம் கூடி அசம்பாவிதத்தை உருவாக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்புகிறார். அது ஒரு வகையில் சரியான பார்வை.
அந்த ரசிகர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டும் என்றால், விஜய் முதலில் அரசியல்வாதியாக மாற வேண்டும். தன்னுடைய அரசியல் கட்சியை அரசியல்மயப்படுத்த வேண்டும். கூட்டம் எப்படி நடத்துவது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில், தவறுகள் நடந்தால், பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், கரூர் சம்பவத்தில் விஜய் எதுவுமே செய்யவில்லை. கரூர் சம்பவத்திற்கு பிறகு அவர் அப்படியே தேங்கி விட்டார். அவ்வாறு கூட்டுப்பொறுப்பு ரசிகர்களுக்கு எவ்வளவு இருக்கிறதோ.. அதே அளவு விஜய்க்கும் இருக்க வேண்டும்.
ரசிகர் மனப்பான்மையை உருவாக்கியதில் அஜித்திற்கும் பங்கு இருக்கிறது தானே?
சினிமா என்பது ரசிகர் மனப்பான்மையை உருவாக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால், அதை அஜித் விரும்பாததாகவே இருந்திருக்கிறார். உதாரணமாக, தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்து இருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட அல்டிமேட் ஸ்டார் மற்றும் தல போன்ற பட்டங்களை வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். “கடவுளே அஜித்தே” என அவரது ரசிகர்கள் பொதுவெளியில் கோஷம் போடும் போது, கூக்குரல் போடாதீர்கள் என அறிக்கை வெளியிடுகிறார். இவ்வாறு, தனது கண்மூடித்தனமான ரசிகர் கூட்டமாக மாறக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
ஆனால், விஜயை பொறுத்தவரை தனக்கு இருக்கக் கூடிய ரசிகர்களை முதலீடாக வைத்தே அரசியலுக்கு வந்திருக்கிறார். அப்படி வரும்போது, விஜய் அவர்களின் ரசிகர்களை அரசியல் மயப்படுத்தவில்லை. இன்னும் சினிமா ரசிகர்களாகவே வைத்திருக்கிறார். ஒன்று அஜித் மாறி நான் என்னுடைய பணியை சினிமாவோடு நிறுத்திக் கொள்கிறேன் என கூறியிருக்க வேண்டும். அவர், அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆனால், அரசியல் கட்சித் தலைவராகவும் விஜய் மாறவில்லை. அந்தவகையில், அஜித்தை முழுமையாக குற்றம்சாட்ட முடியாது.

