"நான் ஷாலினிக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; என்னுடன் வழ்வது சுலபம் இல்லை" - அஜித் | Ajith
அஜித் தற்போது தனது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இது சம்பந்தமாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் கார் ரேஸ் பற்றியும், தன் மனைவி ஷாலினி எப்படி எல்லாம் தனக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது பற்றியும், தன் குழந்தைகள் பற்றியும் பேசி இருக்கிறார்.
உங்களுக்கு ரேஸ் காரில் பலமுறை விபத்து ஏற்பட்டு இருக்கிறது. என்றாவது இது போதும் என நினைத்ததுண்டா?
"எனக்கு இதுவரை ஏற்பட்டுள்ள விபத்துகள் எதுவும், ரேஸில் மீண்டும் கலந்து கொள்ள முடியாது என்ற அளவு மோசமானதாக இல்லை. அதுவேதான் சினிமாவிலும், இதுவரை 29 அறுவை சிகிச்சைகள் எனக்கு செய்யப்பட்டிருக்கிறது. பல நல்ல மருத்துவர்கள் என்னை பார்த்துக் கொள்ள இருப்பதும், என்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதும் எனக்கான ஆசீர்வாதமாக நினைக்கிறேன். கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லோரும் இப்படியான அதிர்ஷ்டம் அமையாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம், நான் என் வாழ்நாள் முழுவதும் தீவிரமான நேர்மறை எண்ணம் உடையவன். தடைகளை பார்த்து புகார் சொல்லலாம் அல்லது அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஒரு வீரனை போல நகரலாம். எல்லா வீரரும் தான் வீட்டுக்கு திரும்பாமல் கூட போகலாம் என்ற எண்ணத்துடனே செல்வர். ஆனால் அது அவரது கடமையை செய்ய தடையாக இருக்காது. இந்த பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். எல்லாம் ஒரு நல்ல காரணத்திற்காகவே நடக்கிறது என நம்புங்கள்.
இன்னும் ஒரு விஷயம் கூட சொல்ல விரும்புகிறேன். நான் என் நண்பர்களுக்கோ, அல்லது வேறு யாருக்கும் மெசேஜ் அனுப்பினாலும், அந்த உரையாடலை நிறைவு செய்யும் போது, I wish you and your loved ones beautiful life (நான் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அழகான வாழ்க்கை அமைய விரும்புகிறேன்) என்ற கருத்தோடே நிறைவு செய்வேன். எல்லோருமே தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நல்ல வாழ்க்கையை தரவே விரும்புகிறார்கள். குற்ற செயல்களில் ஈடுபடும் சிலரது காரணம் இதுவாக கூட இருக்கலாம். நான் கடவுளை பிரார்த்திக்கும் போது அவர்கள் விரும்புவதை, கிடைக்க செய்யுங்கள் என்றே பிரார்த்திப்பேன். அதற்கு இரு காரணங்கள், ஒன்று குடும்பத்திற்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பது. இன்னொன்று செல்வம் போதுமான அளவு இருக்கும் போது பணத்தால் எதை வாங்க முடியும், எதை வாங்க முடியாது என புரிந்து கொள்ள முடியும்.மேலும் நீங்கள் கொடுப்பவரா, எடுப்பவரா என்பதும் உங்களுக்கு தெரியும். தொண்டு செய்பவர்களை பார்க்கும் பலரும் என்னிடம் பணம் இருந்தால் நானும் கொடுப்பேன் என சொல்வார்கள். ஆனால் நான் சொல்கிறேன், பணம் உங்கள் கைக்கு வரும் போதுதான் நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். நான் எதற்காக கொடுக்க வேண்டும், நான் கடுமையாக உழைத்து சம்பாதித்தது என நினைப்பீர்கள். அதனாலேயே எல்லோரின் தேவைகளையும் நிறைவேற்றும்படி பிரார்த்திப்பேன்."
இந்த விளையாட்டு அஜித்தை பிரபலம் என்ற தன்மையில் இருந்து விலகி வரும் இந்த குணத்தை வடிவமைத்திருக்கிறதா?
"கண்டிப்பாக, நிறையவே. எனக்கு 17 வயதில் மகளும், 11 வயது மகனும் இருக்கிறார்கள். அவர்கள் விளையாட்டில் மிக ஆர்வமாக இருக்கிறார்கள். இசையிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். மகள் நன்றாக பாடுவார், மகன் பியானோ, கிட்டார் வாசிப்பார். கல்வி அவசியத்தேவை. ஆனால் விளையாட்டு இசை போன்றவை உங்கள் குணத்தை வடிவமைக்கும்."
உங்கள் மனைவி, ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் உங்கள் மகன் ஓட்டப்பந்தயத்தில் மிக வேகமாக ஓடுகிறார். அதற்கு அப்பாவைப் போல மகனும் என தலைப்பு வைத்திருந்தாரே..
"நான் ஷாலினிக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் உடன் சேர்ந்து வாழ்வது சுலபம் இல்லை. அவருக்கு பல நெருக்கடியான காலங்கள் இருந்திருக்கிறது. ஆனால் ஒருபோதும் அவர் என்னை தடுப்பதில்லை. எங்களுக்கு திருமணமான 2 வருடங்களில் ரேஸிங் சென்றேன். அப்போதும் அவர் ஆதரவாகத்தான் இருந்தார். அவர் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்கவே முடியாது."
சென்னை செல்லும் போது, நீங்கள் இல்லாமல் போன தருணங்களை சமன் செய்ய என்ன செய்வீர்கள்?
"நான் அதிக நேரத்தை வீட்டில் செலவிடுவேன். பிரபலமாக இருப்பது இருபுறமும் கூர் உள்ள கத்தி போன்றது. உங்களுக்கு அது நிறைய கொடுக்கும், அதேபோல நிறைய எடுத்துக் கொள்ளவும் செய்யும். என் ரசிகர்கள் எனக்கு தரும் அன்புக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதே நேரம் அவர்கள் தான் என் குடும்பத்துடன் நான் வெளியே செல்ல முடியாததற்கு காரணமாகவும் இருக்கிறார்கள். இது எனக்கு என்றில்லை உலகில் உள்ள பல பிரபலங்களுக்கும் அதுவே நிலை. மக்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என அனைவரிடம் இருந்து வரும் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் அவைதான் என்னை சில விஷயங்களில் இருந்து தள்ளி வைத்திருக்கிறது. புகழ், வசதியான வாழ்வு எல்லாம் கிடைக்கும், ஆனால் அவை தாண்டி உங்களுக்கு நிஜமாக தேவையான சில விஷயங்களை பறித்துக் கொள்ளும். உதாரணமாக என் மகனை நான் பள்ளிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இரண்டு நாளுக்கு மேல் அதை செய்தால் நான் வருவது எல்லோருக்கும் தெரிந்துவிடும். சில நேரங்களில் என்னால் கூட்ட நெரிசல் உண்டாகிவிடுமோ என பள்ளியில் இருந்து கிளம்பும்படி மரியாதையுடன் கூறுவார்கள். என் மகனும், மகளும் நீங்கள் ஏன் மற்ற அப்பாவைப் போல எங்களை பள்ளியில் விடுவதில்லை என அழுது கொண்டே கேட்டார்கள்" என்றார்.

