\
Sowcar Janaki
Sowcar JanakiSowcar Janaki

சினிமாவில் ஏழு தசாப்தங்கள்.. 400+ படங்கள்.. காலமானார் சௌகார் ஜானகி! | Sowcar Janaki

சௌகார் ஜானகியின் கலைப்பயணம் சினிமாவுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. அவர் நாடக மேடையிலும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.
Published on

இந்திய திரையுலகில் 40களின் இறுதியில் துவங்கி தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த, கதாநாயகி என்ற அடையாளத்தைத் தாண்டி நடிகை என்ற கலைஞரின் ஆளுமையை நிரூபித்தவர்களில் முக்கியமானவர் சௌகார் ஜானகி (94). பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் நம் மனதில் பதித்தவர், இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி இருக்கிறார். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து திரைத்துறையில் பயணித்த அவரின் சினிமா பயணமும், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மொழி எல்லைகள் இன்றி ஆற்றிய நடிப்பு பயணமும் முக்கியமானது.

சினிமாவில் பல பாத்திரங்களில் நடித்த சௌகார் ஜானகியின் கலைப்பயணம் நேரடியாக சினிமாவில் தொடங்கவில்லை. ஜானகி சிறுவயதில் ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதன்மூலம் அவரது குரல் மற்றும் பேச்சுத் திறனால் கவனத்தை ஈர்த்தார். 15 வயதான ஜானகி குரலைக் கேட்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான பி.என்.ரெட்டி, அவரை நேரில் சந்தித்து, தான் தயாரிக்கும் `குணசுந்தரி' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க முன்வந்தார். இதில் ஜானகியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், உறவுக்காரப் பையனுக்கு இவரை மணமுடித்து வைத்தனர்.

திருமணத்திற்குப் பிறகு கணவனுக்கு நிரந்தரமான வேலை இல்லாததால் குடும்பம் பொருளாதார சிரமத்தை சந்தித்தது. அப்போது பி.என்.ரெட்டி சொன்ன சினிமா வாய்ப்பு நினைவுக்கு வரவே இருவரும் சென்னை வந்து பி.என்.ரெட்டியை சந்தித்தனர். ஜானகியின் குடும்ப நிலையை புரிந்துகொண்ட பி.என்.ரெட்டி, தன் சகோதரர் நாகி ரெட்டி தயாரித்து வந்த `Shavukaru' படத்தில் நடிக்க வைக்கச் சொல்லி ஜானகிக்கு சிபாரிசு செய்தார். இயக்குநர் எல்.வி. பிரசாத், கதாநாயகன் என்.டி. ராமாராவ்.

ஜானகிக்கு அந்தப் படத்திற்காக ₹2,500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. பின்னாட்களில் அவரது முதல் பட பெயரான Shavukaru, ஜானகியின் பெயருடன் முன்னோட்டாக ஒட்டிக் கொள்ள, பின்னர் சௌகார் ஜானகி என்றே நிலைத்துப்போனது. அப்போது அவருக்கு வயது சுமார் 18. ஆரம்பத்திலேயே கதாநாயகியாக அறிமுகமான அவர், மிக விரைவில் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளர்ந்தார்.

தனது இரண்டாவது படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் கால்பதித்தார் சௌகார் ஜானகி. டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கி 1952-இல் வெளியான ‘வளையாபதி’ தான் அந்தப் படம். இதன்மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கி, அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், படிப்படியாக முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார்.

Ethir Neechal
Ethir Neechal

‘பாலும் பழமும்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘புதிய பறவை’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘பணம் படைத்தவன்’ போன்ற படங்கள் அவரது நடிப்புத் திறனின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தின. குறிப்பாக ‘புதிய பறவை’ அவரது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அழுத்தமான கதாபாத்திம், நல்ல நடிப்பு மற்றும் திரை ஆளுமை ஆகியவற்றால் அந்தப் படம் அவருக்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியது.

காமெடியிலும் தன்னால் அசத்த முடியும் என சௌகார் ஜானகி நிரூபித்த படம் ‘தில்லுமுல்லு’. ரஜினிகாந்த் நடித்த ‘தில்லுமுல்லு’ திரைப்படம் சௌகார் ஜானகியின் மற்றொரு முகத்தை ரசிகர்களுக்கு காட்டியது. அவரது நீண்ட பயணத்தில் பெரும்பாலும் தீவிரமான மற்றும் குணச்சித்திர வேடங்களே பேசப்பட்டாலும், ‘தில்லுமுல்லு’ போன்ற படங்களில் அவரது நகைச்சுவை உணர்வும் டைமிங்கும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டன. நடிகையாக மட்டுமே தன் பங்களிப்பைக் கொடுத்த சௌகார் ஜானகி தயாரிப்பாளராகவும் களம் இறங்கிய படம் ‘காவியத் தலைவி’. இது அவரின் முக்கியமான படைப்புகளில் ஒன்று. இதில் அவர் தாய் மற்றும் மகள் என இரட்டை வேடத்தில் நடித்தார்.

Thillu Mullu
Thillu Mullu

சௌகார் ஜானகியின் கலைப்பயணம் சினிமாவுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. அவர் நாடக மேடையிலும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். பல்வேறு ஆதாரங்கள் அவர் நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் பங்கேற்றதாகவும், சில ஆதாரங்கள் 3,000-க்கும் மேற்பட்ட நாடக நிகழ்ச்சிகளில் நடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சினிமா, நாடகம், வானொலி என பல்வேறு ஊடகங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய அரிய கலைஞராக அவர் திகழ்ந்தார்.

இத்தகைய நடிகைக்கு விருது அங்கீகாரம் கிடைக்காமல் இருக்குமா? தமிழக அரசின் கலைமாமணி, தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களை அவர் பெற்றுள்ளார். 2013-ல் SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. அவரது பல தசாப்த கால கலைப்பணிக்கு இந்திய அரசின் மிக முக்கியமான அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2022-ல் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கிய நிகழ்வும் அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.

Janaki
Janaki

சௌகார் ஜானகியின் சிறப்பு என்னவென்றால், அவரது பயணம் ஒரு குறிப்பிட்ட தலைமுறையுடன் முடிந்துவிடவில்லை. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்; பின்னர் ரஜினிகாந்த் போன்ற அடுத்த தலைமுறை நட்சத்திரங்களுடனும் பணியாற்றினார். அதன்பிறகு கார்த்தி, ஜோதிகா நடித்த ‘தம்பி’ மற்றும் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’ போன்ற படங்களிலும் தோன்றினார். அதுதான் தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம். தெலுங்கில் சந்தோஷ் சோபன் நடித்த Anni Manchi Sakunamule படம்தான் திரைப்பயணத்தில் அவரது கடைசிப் படம்.

சௌகார் ஜானகியின் சினிமா வாழ்க்கை என்பது வெறும் படங்களின் எண்ணிக்கையால் அளக்கக்கூடியது அல்ல. கதாநாயகி, குணச்சித்திர நடிகை, நகைச்சுவை நடிகை, நாடகக் கலைஞர், தயாரிப்பாளர் என கலைத்துறையின் பல பரிமாணங்களைத் தொட்டவர். சினிமாவில் பெண்களின் இடம் இன்றைய அளவுக்கு விரிவடையாத காலத்தில் தனது திறமையால் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கினார். ‘சௌகார்’ என்ற பெயர் ஒரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி , ‘சௌகார் ஜானகி’ என்ற அடையாளத்தை உருவாக்கி பல  தலைமுறைகளின் நினைவுகளில் பதிந்துவிட்டார். ஏழு தசாப்தங்களைத் தாண்டிய அவரது பயணம், தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் வளர்ச்சியை மட்டுமல்ல. இந்திய சினிமா மாறிய விதத்தையும் பிரதிபலிக்கும் ஒரு வரலாறு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com