இயக்குநரான செம்மலர் அன்னம்... IFFR திரையாகும் படம்! | Mayilaa | Semmalar Annam | Pa Ranjith
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் செம்மலர் அன்னம். `குரங்கு பொம்மை', `யாத்திசை', `மாவீரன்', `அயலான்', `அந்தகன்' எனப் பல படங்களில் நடித்த செம்மலர், இப்போது `மயிலா' படம் மூலம் இயக்குநராக களம் இறங்குகிறார். நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிப்பில் பிரபல திரைப்பட இயக்குநர் பா இரஞ்சித் வழங்குகிறார்.
மெலோடி டார்கஸ், வி. சுடர்கொடி, கீதா கைலாசம், சத்யா மருதானி, ஆட்டோ சந்திரன், RJ பிரியங்கா, மற்றும் ஜானகி சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட “மயிலா” திரைப்படம், தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது. அவளது மகளான சுடர் பார்வையில், தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பும் வேதனையும் தாங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை இப்படம் மூலம் பேசி இருக்கிறாராம் செம்மலர் அன்னம்.
நீலம் புரொடக்ஷன் மூலம் வழங்கும் பா இரஞ்சித் மயிலா படம் மற்றும் இயக்குநர் செம்மலர் அன்னம் பற்றி கூறுகையில் " ‘மயிலா’ எளிய பின்னணியிலிருந்து வரும் உழைக்கும் பெண்களின் வாழ்வியல் சிக்கல்களை; அவர்களின் மன ஓட்டத்தை; உலகை மிக அற்புதமாகப் பேசியிருக்கிறது. எளிய திரைமொழியில், மிக இயல்பாகவும் மிக நுட்பமாகவும் பேச வேண்டிய ஒரு பெண்ணுலகைப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் செம்மலர் அன்னம். படத்தில் திரைக்கலைஞர் மெலோடியும் சிறுமியும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த படைப்பின் மூலம் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறார் செம்மலர். ‘மயிலா’ ஒரு கவிதையைப்போல எனக்குள் அழகான பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது!’ என்றார்.
55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)-வின் `பிரைட் ஃப்யூச்சர்' (Bright Future) பிரிவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்படுகிற, அனைத்து மொழித் திரைப்படங்களில் ஒன்றாக மயிலா படமும் திரையிடப்பட உள்ளது.

