"போலி புகைப்படங்களைப் பரப்பாதீர்கள்" - நடிகை பிரியங்கா மோகன் வேண்டுகோள் | Priyanka Mohan | OG
கன்னடத்தில் வெளியான `Ondh Kathe Hella' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். பின்னர் நானியுடன் நடித்த `கேங்க் லீடர்', சிவகார்த்திகேயனுடன் நடித்த `டாக்டர்' போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் `OG' படத்தில் நடித்திருந்தார்.
இந்தச் சூழலில் சமீப தினங்களாக, `OG' படத்தின் ஒரு பாடல் காட்சியில் வரும் பிரியங்கா மோகனின் சில புகைப்படங்கள் இணையத்தில் உலவி வருகின்றன. இந்நிலையில் அந்த புகைப்படங்கள் தன்னுடையதல்ல, AI மூலம் உருவாக்கப்பட்டவை என X தளத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரியங்கா.
அந்தப் பதிவில் "என்னைப் பற்றி தவறாகச் சித்தரிக்கும்படி AIயால் உருவாக்கப்பட்ட சில படங்கள் பரவி வருகின்றன. தயவுசெய்து இந்தப் போலி காட்சிகளைப் பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ நிறுத்துங்கள். AI என்பது முறையான படைப்பாற்றலும் பயன்படுத்தபட வேண்டும், தவறான தகவல்களை உருவாக்க அல்ல. நாம் எதை உருவாக்குகிறோம், எதை பகிர்ந்துகொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம். நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.