தோனி பரிசளித்த அந்த ஸ்பெஷல் பேட் - நடிகர் யோகி பாபு போட்ட பதிவின் பின்னணி இதுதான்!

யோகி பாபுவுக்கு தான் வலைப்பயிற்சியில் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்-ஐ தோனி முன்பு பரிசளித்திருந்த நிலையில், அந்த வீடியோவை தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
MS Dhoni, Yogi Babu
MS Dhoni, Yogi BabuTwitter

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் வலம் வருபவர் யோகி பாபு. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’, ஷாருக்கானின் ‘ஜவான்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட பல படங்களில் நடித்து முடித்துள்ளார் யோகி பாபு.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், தோனியிடமிருந்து சர்ப்ரைஸாக வந்த கிரிக்கெட் பேட்-ஐ பிரித்து பார்க்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், “வலைப் பயிற்சியின்போது தோனி பயன்படுத்திய பேட் இது, நேரடியாக அவரது கைகளிலிருந்து வந்துள்ளது. பேட்டினை பரிசளித்தற்கு மிக்க நன்றி தோனி சார். உங்களின் கிரிக்கெட் மற்றும் சினிமா நினைவாற்றலை எப்போதும் ரசிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த புதிய வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டில் ‘வாழ்த்துகள் யோகி பாபு’ என்று தோனி கையெழுத்திட்டிருந்தார்.

நேற்று முன்தினம் தான் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதனால், பழைய வீடியோவை மீண்டும் அவர் பகிர்ந்துள்ளாரா எனத் தெரியவில்லை. சினிமாவைத் தாண்டி கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்டவர் யோகி பாபு. இதனால், அவ்வப்போது கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி நடத்தி வரும் தோனி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், முதன்முதலாக திரைத்துறையில் அதுவும் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘LGM- Let’s Get Married’ என்ற அந்தப் படத்தில் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com