“இளம் தலைமுறையினருக்கு வழிகாட்ட நடராஜன் போல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்” - யோகி பாபு

நடராஜனின் கிரிக்கெட் மைதானத்தில் அவர் பந்து வீச நடிகர் யோகி பாபு பேட்டிங் செய்து அசத்தினார்.
யோகி பாபு-நடராஜன்
யோகி பாபு-நடராஜன்PT Desk

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்திலிருந்து சென்று ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்ததன் மூலம் யார்க்கர் மன்னன் என்று பெயர் பெற்றுள்ள நடராஜன், தனது சொந்த ஊரில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளார். இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று திறந்து வைத்தார். இதற்கான விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, கிரிக்கெட் வீரர்கள் விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், திரைப்பட நடிகர்கள் யோகி பாபு, படவா கோபி, புகழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Yogi Babu-Dinesh kartik
Yogi Babu-Dinesh kartikPT Desk

தொடக்க விழாவில் உரையாற்றிய தினேஷ் கார்த்திக், தான் பிறந்து வளர்ந்த பகுதியில் தன்னை போல் வீரர்களை உருவாக்க வேண்டும் என்று நடராஜன் மேற்கொண்டுள்ள முயற்சியை வெகுவாக பாராட்டினார். இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் தனக்கு இதுபோன்ற ஒரு சிந்தனை வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணி உடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் போது ஆஸ்திரேலியா முன்னணி வீரர்கள் பலர் நடராஜன் குறித்து விசாரித்ததாகவும், அந்த அளவிற்கு தனது திறமையால் பலரது கவனத்தை ஈர்த்தவர் நடராஜன் என்றும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து நடராஜனின் கிரிக்கெட் மைதானத்தில் அவர் பந்து வீச நடிகர் யோகி பாபு பேட்டிங் செய்து அசத்தினார். தொடர்ந்து நடராஜன், யோகி பாபு பந்து வீச இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் யோகி பாபு, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்ட நடராஜன் போல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்றார்.

கிரிக்கெட் விளையாட்டில் இந்திய வீரர் சேவாக் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அடுத்ததாக நடராஜனை மிகவும் பிடிக்கும் என்றும் யோகி பாபு தெரிவித்தார். மேலும், கிரிக்கெட் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடிப்பதாகவும் யோகி பாபு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com