கடுமை காட்டிய பவுன்சர்கள்... உடனே மன்னிப்பு கேட்ட சூரி! | Soori | Mandaadi
சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ படம் உருவாகிவருகிறது. மகிமா நம்பியார், நடிகர் சுஹாஷ் உள்ளிட்டப் பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மீனவர்களின் படகு போட்டியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் பகுதிகளில் நடந்துவருகிறது.
இந்த நிலையில் இப்படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் ஒன்றை எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டார். அதில் "அன்புள்ள சூரி அண்ணா, உங்கள் பட சூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களது பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வைக்கவும் நன்றிகள்" என குறிப்பிட்டு அதில் நடிகர் சூரியையும் டேக் செய்திருந்தார்.
அந்த பதிவில் நடிகர் சூரி "தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவித்து இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி" எனப் கமெண்ட் செய்து மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தப் பதிவு அதிகம் பகிரப்பட்டது. கூடவே சூரியின் பதிலுக்கு இப்பதிவை இட்ட நபர் "நன்றிகள் அன்பு அன்னனுக்கு.. நமது மன்டாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார். தற்போது சூரியின் இந்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

