”சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு” - நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல்

நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
Actor Sarath Babu
Actor Sarath BabuFile image

கடந்த 1977-ம் ஆண்டு ‘பட்டினப் பிரவேசம்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு. தொடர்ந்து ‘நிழல் நிஜமாகிறது’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர், ரஜினிகாந்தின் ‘வேலைக்காரன்’, ‘முத்து’, ‘அண்ணாமலை’ ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக, ‘முள்ளும் மலரும்’ படத்தில் ஜீப்பை ஓட்டிக்கொண்டே நடிகர் சரத்பாபு பாடிய ‘செந்தாழம் பூவில் வந்து ஆடும் தென்றல்’ பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் வலம் வந்த அவர், சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குவைறால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு உயிரிழந்துள்ளார்.

அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது சமூகவலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது - கமல்ஹாசன்

”காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது; அவருக்கு என் அஞ்சலி” என்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய இரங்கல் செய்தியை தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் இரங்கல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தம்முடைய ட்விட்டர் பதிவில், “பழம்பெரும் நடிகர் சரத்பாபுவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது திறமையும், திரைத்துறைக்கான பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி” என்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

”இது ஈடுகட்ட முடியாத இழப்பு” - ரஜினி காந்த் இரங்கல்

”இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என்று ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பல்துறை மற்றும் படைப்பாற்றல் மிக்க நடிகர் சரத்பாபு என்றும் அவரது மறைவு வேதனை அளிக்கிறது என்று பிரதமர் தம்முடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

”மிகவும் மன வேதனை அடைந்தேன்” - ஆளுநர் தமிழிசை இரங்கல்

”தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்” என்று ஆளுநர் தமிழிசை தம்முடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

”பண்பட்ட நடிப்பால் முத்திரை பதித்தவர்” - அண்ணாமலை இரங்கல்

”தென்னிந்திய மொழிகளில் தன் பண்பட்ட நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகர் சரத்பாபு; அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com