“இதப்பத்தி நான் சொன்னா... அப்புறம் என்ன தப்பா நினைப்பாங்க...” - நடிகர் சந்தானம் கலகல!

திரைப்படங்களில் இயக்குநர்கள் முடிந்தவரை புகைப்பிடித்தல் ,மது அருந்துதல் போன்ற காட்சிகளை தவிர்த்தல் நல்லது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
Actor santhanam
Actor santhanam PT Desk

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி, வரும் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான பேய் படம்; திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்தப் படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சி வெளியாகும். அடுத்ததாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படம் வெளிவர இருக்கிறது. தற்போது கதாநாயகனாக நடித்து வருகின்றேன். ‘நகைச்சுவை நடிகரா, கதாநாயகனா’ என என்னிடம் கேட்டால், இட்லி வேண்டுமா, தோசை வேண்டுமா என்பது போல இருக்கிறது.

நகைச்சுவை நடிகராக இருந்தபோது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தேன். தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். மீண்டும் நல்ல கதை வந்தால் நகைச்சுவை கேரக்டரில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன். இதேபோல் சொந்த படம் எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கின்றது. இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை இயக்குநர்கள் தவிர்ப்பது சிறப்பு” என்று தெரிவித்தார்.

பின்னர் காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சந்தானம், "நான் டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்திருக்கிறேன். அது தொடர்பாக பதில் அளித்தால் காலையிலேயே நான் சரக்கு போட்டு வந்ததாக மக்கள் நினைப்பார்கள்” என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com