’ஜெயிலர் 2’ ரிலீஸ் எப்போது? ரஜினி தந்த அப்டேட்! | Jailer 2 | Rajinikanth | Nelson
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி 2023ல் வெளியான படம் `ஜெயிலர்'. இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலிலும் பெரிய சாதனையைச் செய்தது. அனிருத்தின் பாடல்கள், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார் ஆகியோர் கெஸ்ட் ரோலில் வந்தது, படத்தின் சண்டைக் காட்சிகள் எனப் பல விஷயங்கள் ஹைலைட்டாக அமைந்தன. ரசிகர்களிடையே படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் இதன் அடுத்த பாகம் உருவாகும் எனச் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து `ஜெயிலர் 2' படத்தின் வேலைகள் துவங்கி, பொங்கலன்று படத்தின் புரமோ வீடியோ வெளியானது.
அதன் பிறகு மார்ச் 10ஆம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கியது. பின்பு அட்டப்பாடி, கோழிக்கோடு, கோயம்புத்தூர், மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இதன் படப்பிடிப்புகளுக்காக ஒரு வாரமாக கேரளாவில் இருந்த ரஜினிகாந்த், தற்போது சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜெயிலர் 2 படப்பிடிப்புகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் படத்தின் வெளியீட்டு எப்போது எனக் கேட்கப்பட்டபோது ஜூன் மாதம் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான `கூலி' படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியில் பின்னடைவையே சந்தித்தது. கூலியை தொடர்ந்து சன்பிக்சர்ஸ் நிறுவனமே `ஜெயிலர் 2'வையும் தயாரித்துள்ளது. தற்போது ரசிகர்கள் அனைவரின் பார்வையும், ஜெயிலர் 2 மீதே குவிந்துள்ளது.