நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா, கல்லீரல் பிரச்னை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (03.05.2023) உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69.
manobala
manobalaPT Desk

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய மனோபாலா இயக்குநராக, தயாரிப்பாளராக, குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக பன்முகத் திறமைகளுடன் திரையுலகில் வலம் வந்துக் கொண்டிருந்தார். உதவி இயக்குநராக இருந்தபோது, 1979-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில், சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மனோபாலா. அதன்பிறகு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த 1982-ம் ஆண்டு ‘ஆகாய கங்கை’ என்றப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மனோபாலா, பின் ரஜினிகாந்தின் நடிப்பில் ‘ஊர்க்காவலன்’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்தில் ‘டிசம்பர் 31’ என்றப் படத்தையும் அவர் இயக்கியுள்ளார். தமிழில் இவர் இயக்கத்தில் வெளியான ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ படத்தை இந்தியில் அவரே ரீமேக் செய்திருந்தார். இயக்குநர் எச் வினோத்தின் அறிமுகப் படமான, ‘சதுரங்க வேட்டை’ படத்தை மனோபாலா தயாரித்திருந்தார். மேலும் ‘அல்லி ராஜ்ஜியம்’ உள்பட சில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்திருந்தார்.

மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிக்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கல்லீரல் பிரச்னை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று (03.05.2023) உயிரிழந்துள்ளார். அவரின் திடீர் மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் உள்பட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com