Ajith Kumar
Ajith KumarFile image

‘ஏகே மோட்டோ ரைடு’ - அஜித் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற பெயரில் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக நடிகர் அஜித் அறிக்கை வாயிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Published on

எச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியிலேயே நடிகர் அஜித், குழு ஒன்றுடன் வட இந்தியப் பகுதிகளில் பைக்கில் பயணம் மேற்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி வைரலாகின. ‘துணிவு’ படத்தை அடுத்து, அஜித்தின் 62-வது படத்தின் படப்பிடிப்பு முடிந்தப் பின்னரே மீண்டும் பைக் சுற்றுலா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்தப் படத்தின் அறிவிப்பு காலதாமதத்தால் மீண்டும் பைக் சுற்றுலா பயணம் மேற்கொண்டார் அஜித்.

மஞ்சு வாரியர்-அஜித்
மஞ்சு வாரியர்-அஜித்

இந்நிலையில், இன்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் தெரிவித்துள்ளதாகக் கூறி அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு

இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: 'வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயனம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப் பயணங்களை வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப் பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.

வாழு வாழ விடு -அஜித்குமார்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித்தின் விடா முயற்சி படத்தின் படப்படிப்பு எப்பொழுது துவங்கும், அதில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என படம் தொடர்பான அப்டேட்டுகளாக ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் இப்படியான ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதனால், படம் தொடர்பான அறிவிப்புகள் இன்னும் தாமதம் ஆகும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com