‘நீங்கள் பெஸ்ட் அண்ணா..’ - சக ரைடருக்கு சூப்பர் பைக் பரிசளித்த நடிகர் அஜித்; விலை இத்தனை லட்சமா?

அஜித்தின் வடகிழக்கு பகுதி பைக் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துக்கொடுத்தவரும், சக ரைடருமான சுகத் சத்பதி என்பவருக்கு நடிகர் அஜித், விலையுர்ந்த பி.எம்.டபிள்யூ பைக் பரிசளித்துள்ளார்.
Ajithkumar-Sugat Satpathy
Ajithkumar-Sugat Satpathy@Sugat Satpathy insta

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், சினிமாவைத் தாண்டி, பைக், கார், ஹெலிகாப்டர் என ஆட்டோமொபைல் தொடர்பான விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும்.

Ajithkumar Bike ride
Ajithkumar Bike ride

அந்தவகையில், ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பின்போது இடைவெளியில் வட இந்தியப் பகுதிகளில், குழு ஒன்றுடன் நடிகர் அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின. அவரின் 62-வது படத்தின் பட வேலைகள் முடிந்தப்பின்னர் மீண்டும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆனால் சில காரணங்கள் அந்தப் படத்தின் அறிவிப்பு காலதாமதத்தால் உலக சுற்றுலாப் பயணத்தின் ஒரு பகுதியாக நேபாளம், பூட்டான் ஆகிய இடங்களுக்கு அஜித் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். நவம்பரில் தனது அடுத்த சுற்றுலாப்பயணத்தையும் அவர் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், அஜித்தின் பைக் சுற்றுலா பயணத்திற்கு இருமுறை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் ட்ராவலரான சுகத் சத்பதி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார். அதில், “எதுவும் முன்கூட்டியே தீர்மானிக்கப் படுவதில்லை. உங்களின் கடந்த கால தடைகள் புதிய தொடக்கங்களுக்கு வழிவகுக்கும்.

Ajithkumar-Sugat Satpathy
Ajithkumar-Sugat Satpathy@Sugat Satpathy insta

கடந்த 2022-ல் சிக்கிம் மாநிலத்திற்கு ரைடு போனவர்களுடன் நானும் சென்றேன். ஏகபோக வாழ்க்கையை இல்லாமல், எனது ஆன்மா ஏங்கியது இதைத்தான் என்பதை அப்போது ஆழமாக உணர்ந்தேன். புதிய சூழல், சுற்றிலும் மிக அழகான மனிதர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, வாழ்க்கையில் ஒரு அர்த்தம் தெரிந்தது. நான் ஒரு அதிர்ஷ்டசாலி. ஏனெனில், அதே ஆண்டின் இறுதியில், தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகத் திகழும் அஜித்குமார் அவர்களுடைய தொடர்பு கிடைத்தது. அதனை நான் எனது பாக்கியம் என்றுதான் கூறுவேன்.

Sugat Satpathy
Sugat Satpathy@Sugat Satpathy insta

பின்னர், நான் அவருக்காக ஒரு முழுமையான வடகிழக்கு மாநில சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துக்கொடுத்தேன். மேலும் எனது பழைய டியூக் 390 பைக்கில் அவருடன் பயணம் செய்தேன். அப்போதைய பயணத்தின்போது, நேபாளம் மற்றும் பூட்டானுக்கு (உலக சுற்றுப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதி) மேலும் ஒருமுறை என்னுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அவர் உறுதியளித்தார். இந்தப் பயணத்தை நாங்கள் சமீபத்தில், அதாவது மே 6-ம் தேதிதான் முடித்தோம். இந்தப் பயணம் முழுவதும், பல மறக்க முடியாத நினைவுகளை நாங்கள் உருவாக்கினோம், நம்பமுடியாத தூரம் பயணம் செய்தோம்.

பல அழகான சூரிய அஸ்தமனங்கள் மற்றும் சூரிய உதயங்களைக் கண்டோம். பைக் சுற்றுலாப்பயணத்தின்போது நல்ல மனிதர்களை நீங்கள் சந்திப்பீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், நான் சிறந்த மனிதனை சந்தித்தேன் என்றுதான் கூறுவேன். எல்லையற்ற புகழுடன் இருந்தாலும், அவருடைய பணிவு மற்றும் எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளும் அவரின் (அஜித்) போக்கைக் கண்டு நான் வியப்படைந்தேன். சூப்பர் ஸ்டார் என்ற புகழுக்குப் பின்னால் ஒரு எளிய மனிதராக அவர் இருக்கிறார், வாழ்க்கையை பெரிய அளவில் வாழத் தயாராக இருக்கிறார். அதாவது நான் ஆடம்பரத்தை குறிக்கவில்லை, மன அமைதியை பற்றி குறிப்பிட்டேன்.

இங்கே இருக்கும் இந்த F850gs பைக், வெறும் மோட்டார் சைக்கிள் என்பதை விட, எனக்கு மிகவும் முக்கியமான பொருள். ஏனெனில், இந்த பைக், அவர் (அஜித்குமார்) எனக்கு பரிசளித்தது. மிகுந்த அன்புடன் அண்ணாவிடமிருந்து வந்த பரிசு இது. உலகை மேலும் சுற்றிவர இந்த அழகான F850GS பைக்கை நான் வைத்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவரைப்பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. எனினும், அவரை எனது மூத்த சகோதரர் போல் உணர வைத்தார். என்னிடமிருந்து எந்த எதிர்பார்ப்புமின்றி, எனக்கு நல்லதை மட்டுமே செய்ய விரும்புகிறார்.

நீங்கள் சிறந்தவர், அண்ணா! உங்களுடன் இன்னும் பல தூரங்களை கடக்க அவ்வளவு நாள் காத்திருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். அஜித்குமார் பரிசாக அளித்துள்ள பி.எம்.டபிள்யூ பைக், ரூ. 12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com