`கூலி'யில் நடித்ததில் அமீர்கானுக்கு மகிழ்ச்சியே! - விஷ்ணு விஷால் | Coolie | Aamir Khan | Aaryan
விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானசா நடித்துள்ள `ஆர்யன்' படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் விஷ்ணு விஷாலிடம் "இந்தப் படத்தில் அமீர்கானை நடிக்க கேட்டீர்களே, அவர் ஏன் நடிக்க முடியாமல் போனது?" எனக் கேட்கப்பட,
"நாங்கள் தமிழில் ஆரம்பித்த போது வில்லன் ரோலில் நடிக்க செல்வராகவன் சாரை தான் முடிவு செய்திருந்தோம். அது லால் சிங் சத்தா படத்திற்கு பின் 2 ஆண்டுகள் நடிக்க மாட்டேன் என அமீர்கான் அறிவித்திருந்த சமயம். அப்போது இந்தக் கதையை அமீர் சார் கேட்ட போது, இந்தியிலும் படத்தை எடுக்கலாம் என கூறினார். அப்படி என்றால் நீங்கள் நடிப்பீர்களா எனக் கேட்டேன். எனக்கும் அதுதான் தோன்றியது எனக் கூறியதும், இந்திக்காக ஆயத்தமானோம். ஆனால் செல்வா சாரை பார்த்த பின்பு, தமிழில் இவர் பொருத்தமாக இருக்கிறார். இந்தியில் நான் எப்படி இருப்பேன் என எனக்குத் தெரியவில்லை. மேலும் நான் பல ஆண்டுகள் ஹீரோவாகவே நடித்து வந்தவன். மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் எனத் தெரிவில்லை. கூடவே மாரலாக ஒரு கேள்வியையும் அவர் முன்வைத்து, இதனை மாற்ற முடியுமா எனக் கேட்டார். இல்லை சார் அதுதான் படத்தின் சுவாரஸ்யமே எனக் கூறி மறுத்துவிட்டேன். பின்பு இதைப் பற்றி குறிப்பிட்டு, நீ எனக்கே நோ சொன்ன தைரியம் பிடித்தது என்றார்."
மேலும் "கூலி படத்தில் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என பேட்டி அளித்திருந்தாரே, அதனால் தான் தமிழ் படத்தில் அவர் நடிக்க தயங்குகிறாரா? எனக் கேட்ட போது,
"அப்படியான ஒரு பேட்டியை அவர் கொடுக்கவே இல்லை எனக் கூறினார். அந்த பேட்டி சார்ந்த புகைப்படத்தை நான் அவருக்கு அனுப்பினேன். நான் இப்படி சொல்லவில்லை, உடனே இதற்கு மறுப்பு கொடுக்கிறேன் என அதனை செய்தார். அவர் ரஜினி சார் மீது இருந்த அன்பின் காரணமாக தான் அந்தப் படத்தில் நடித்தார். அதில் நடித்ததில் அவருக்கும் மிகவும் மகிழ்ச்சி. மேலும் அதனை வெளிப்படையாகவும் சொல்லிவிட்டார்." என்றார்.