‘மாஸ்டர்’ வெளியீட்டில் சிக்கல்? - முடங்கிப் போன தமிழ் சினிமா
‘அலை வந்தால் அரசியலுக்கு வருவேன்’ என்று கடந்த வாரம் ரஜினிகாந்த் சொன்னார். ரஜினி குறிப்பிட்டு சொன்ன அந்த அரசியல் அலையை மக்கள் பார்ப்பதற்குள், ஒரு மிகப் பெரிய அலை தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து தாக்க ஆரம்பித்திருக்கிறது. ஆம்! கொரோனா ஏற்படுத்திய அச்ச அலையால் அத்தனை வேலைகளும் முடங்கிப் போய் உள்ளன.
எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் அது சினிமா உலகை பாதிக்கவே பாதிக்காது. ஆனால் இன்று தியேட்டர்களையும் மால்களையும் மூட சொல்லி அரசே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் பொழுதுபோக்கு மையமாக செயல்படும் அத்தனை மால்களிலும் மக்களை காணோம். முழுவதுமாக முடங்கிய நிலையை பார்த்த பிறகு, பெஃப்சி அமைப்பின் தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். திரைப்படங்களில் கற்பனை செய்யப்பட்ட நோய்களை விட தீவிரமாக கொரோனா தாக்கம் இருப்பதால் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலவரப்படி 36 திரைப்படங்களும், 60 சீரியல்களும் படப்பிடிப்பில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. ஒருநாள் ஷூட்டிங் தள்ளிப் போனாலே அது தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம் வரும். ஆனால் இந்த மாதம் இறுதிவரை என்பது பெரிய இடைவெளி. வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கும் பல தயாரிப்பாளர்களைக் கொண்டதுதான் தமிழ் சினிமா. பணத்தை வைத்துக் கொண்டு படம் எடுக்க வருபவர்கள் மிகமிகக் குறைவு. ஆகவே இந்தப் படப்பிடிப்பு நிறுத்தம் தயாரிப்பாளரை மட்டும் பாதிக்காது. அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ள ஸ்டுடியோக்களை பாதிக்கும். அடுத்த மாதம் அதே இடத்தை பதிவு செய்து வைத்துள்ளதவர்களை பாதிக்கும். ஆக, அதற்கு மீண்டும் ஒரு போட்டி உருவாகும். இதனால் இடைத்தரகர்கள் கை வலுப்பெறும். எப்படி பார்த்தாலும் இந்தச் சிக்கல் படிப்படியாக வளர்ந்து கொரோனாவைவிட அதிகமான பாதிப்பை சினிமா துறைக்கு கொடுக்கும்.
சினிமாத்துறையை பொறுத்தவரை கோடைக்காலம் என்பது பொன்முட்டை இடும் வாத்து போன்றது. அந்தக் காலத்தில்தான் பள்ளி விடுமுறை உட்பட பல வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே குடும்பத்தினருடன் கோடையை கொண்டாட பலரும் ஆயத்தமாக இருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் மற்ற மாதங்களில் படம் பார்க்கிறார் என்றால் இந்தக் கோடை மாசத்தில் மட்டும் வீட்டில் உள்ள அனைவரும் தியேட்டருக்கு வரும் வாய்ப்பு அதிகம். ஆகவே அந்த மாதத்தை குறிவைத்து பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும். திட்டமிட்டபடி வசூலையும் வாரி குவிக்கும். இதை திட்டமிட்டுதான் இந்தக் கோடைக்கால கொண்டாட்டமாக விஜயின் ‘மாஸ்டர்’ வெளியீட்டை திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால் இப்போது ஒரு பக்கம் கோரோனா பாதிப்பால் தியேட்டர்கள் மூடல் இன்னொரு பக்கம் திரைப்பட விநியோகிஸ்தர்கள் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் என ஒட்டு மொத்தமான திரைத்துறையே இந்தக் கோடையில் முடங்கிப் போய் நிற்கிறது.
ஒரு படத்தின் ரிலீசை முன்வைத்துதான் ஆடியோ வெளியீட்டை முடிவு செய்வார்கள் தயாரிப்பாளர்கள். அதன்படியே ‘மாஸ்டர்’ ஆடியோவும் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்துள்ளது. அந்த ஆர்வம் வடிவதற்குள் ‘மாஸ்டர்’ திரைக்கு வந்தாக வேண்டும். ஆனால் இப்போதைக்கு ஏப்ரல் 9 வெளியீடு என விஜயின் படக்குழு முடிவு செய்திருந்தது கதைக்கு ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வாரங்களாக மூடிக்கிடக்கும் தியேட்டர்கள், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் திறக்கப்பட்டால், ஆரம்பித்த முதல் வாரமே பெரிய வசூலை எட்ட முடியுமா? என கட்டாயம் தயாரிப்பாளர் தரப்பு யோசிக்கும். மேலும், இப்போது கோடை விடுமுறைக்கு முன்பாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனை சரிய செய்ய பள்ளிகளின் வேலை நாட்கள் அடுத்த மாதம் நீடிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எப்படி பார்த்தாலும் இந்தக் கொரோனா பாதிப்பு பீதியால் திரைத்துறை பழைய வசூலை பார்க்க முடியாது என்றே பலரும் சொல்கிறார்கள்.
இது ஏதோ இது விஜய் படத்திற்கான பிரச்னை மட்டுமல்ல; ரஜினியின் ‘அண்ணாத்த’ அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்புகள் கூட முடங்கியுள்ளன. ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளதால் அங்கே படப்பிடிப்புகள் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக, திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால் திட்டமிட்டபடி வேலைகளை முடிக்க முடியாது. தள்ளிப் போகும் வேலைகள் படத்தின் கால அளவிற்கு ஒரு நெருக்கடியாக மாறும். அது கிரியேடிவிட்டியை பாதிக்கும். அப்படி என்றால் ரஜினியின் ‘அண்ணாத்த’ குறிப்பிட்ட படி தீபாவளிக்கு வருமா என யோசிக்க செய்கிறது. ரஜினி இதற்காக கொடுத்துள்ள கால்ஷீட்டில் சில இடைஞ்சல்கள் வரலாம். அதன் மூலம் அவர் ஏற்கெனவே திட்டமிட்ட வேலைகள் முடங்கலாம். இவ்வாறு பல தொல்லைகளை உருவாக்கியுள்ளது கொரோனா.
விஜய் படத்தை பொறுத்தவரை இனிமேல் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்தான். ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டதால் ‘மாஸ்டர்’ குழுவிற்கு சிக்கல் இல்ல. ஆனால் ரீரெக்கார்டி போன்ற பல வேலைகள் உள்ளன. அதனை வேகப்படுத்தி கொண்டு வர உள்ள நேரத்தில் இந்தக் கொரோனா வேலையை காட்டிவிட்டது. விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்தை வேலை முடிந்த கையோடு திரைக்கு கொண்டுவந்து ரசிகர்களுக்கு தீனியாக்கி விடவேண்டும் என தயாரிப்பாளர் தரப்பினர் யோசிப்பார்கள். வேலை முடித்து ஸ்டுடியோவிற்குள் வைத்தால் சில கருப்பு ஆடுகள் லீக் வெர்ஷனை வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.
ஆக, எப்படி பார்த்தாலும் ‘மாஸ்டர்’ குறிப்பிட்ட காலத்தில் வெளியாகவில்லை என்றால் அடுத்தடுத்து வர உள்ள படங்களின் வெளியீட்டு தேதியை அது பாதிக்கும். ஒட்டுமொத்தமாக தியேட்டர்களை ‘மாஸ்டர்’ அள்ளிக் கொள்ளும் என்பதால் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாவதில் மேலும் சில தர்மசங்கடங்கள் எழும். இப்படி கொரோனா முதலில் வைரசாக இருந்தது. இப்போது அது தமிழ் சினிமாவை துரத்தும் டெவிலாக மாறி இருக்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறது திரைத்துறை? அதற்கான பதிலை அடுத்த மாதம் தான் தர முடியும். ஏனென்றால் பீதியின் அளவு அதிகரித்தால், நோயின் தாக்கம் அதிகரித்தால் விடுமுறை காலம் இன்னும் நீட்டிக்கப்பட்டாலும் படலாம். அதை இப்போதே ப்ளான் போட்டு சொல்ல முடியாது என்பதே நிதர்சனம்.