திரையும் தேர்தலும் 8: தமிழர்கள் மீதான நேருவின் விமர்சனமும், தமிழ் சினிமாவின் எதிர்வினையும்
ராஜாஜியின் கொள்கைகள் தமிழக அரசியலுக்கு ஒவ்வாததாக இருந்ததை ஏற்கெனவே நாம் பார்த்தோம். குறிப்பாக, அவர் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட 'குலக்கல்வித் திட்டம்' காங்கிரஸிலேயே மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 1954-ல் கர்மவீரர் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றார். கல்வி என்பது எல்லோருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்பதும், பொருளாதார ரீதியாக ஒருவர் பின்தங்கியிருப்பதாலேயே கல்வி கற்கும் சூழல் இல்லாமல் இருப்பதை மாற்றி, அவர்களை பள்ளிக்கூடம் வரை கொண்டுவரத் தேவையான எல்லா திட்டங்களையும் காமராஜர் வகுத்தார்.
உண்மையில் காமராஜரின் இந்த ஆட்சிக்காலம் பொற்காலம் என்று சொல்வது மிகையில்லை. காங்கிரஸின் மீது மக்களுக்கு இருந்த பல எதிர்விமர்சனங்களை மொத்தமாக துடைத்தெறியும் ஒரு மிகப்பெரிய கருவியாக காமராஜர் ஆட்சி புரிந்தார். இதையெல்லாம் மீறி திராவிடக் கட்சிகள் கோலோச்சுவதற்கும், ஆட்சிக்கு வருவதற்கும் ஏராளமான காரணங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமான ஒன்றே திரைப்படங்கள்.
திருப்பதி தரிசனம் மூலம் திமுகவில் இருந்து திட்டமிட்டு தன்னை சிவாஜி கணேசன் விலக்கிக் கொண்டார். ஆனாலும், கலைஞர் கருணாநிதி வசனத்தில் 'ராஜா ராணி' படத்தில் அப்போது நடித்துக்கொண்டிருந்தார். 'நானே ராஜா' என்றொரு படமும் படித்துக் கொண்டிருந்தார். அதற்கு கதை - வசனம் கவியரசர் கண்ணதாசன். 'நானே ராஜா' படத்தில் அரசியல் வசனங்கள் எதுவும் இல்லை. மாறாக 'ராஜா ராணி'யில் மிக பலமான அரசியல் பிரசாரம் இருந்தது. அந்நேரத்தில், ஆந்திர மாநிலத்தில் இருந்த சித்தூர் தமிழர்கள் அந்த ஊரை தமிழகத்துடன் சேர்க்கவேண்டும் எனப் போராடிக்கொண்டிருந்தனர். அந்தப் போராட்டம் "அர்த்தமற்றது" என்பதைக் குறிக்கும் வகையில் "நான்சென்ஸ்" என்றொரு வார்த்தையை அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு பயன்படுத்தியிருந்தார்.
தமிழ்நாட்டு மக்கள் ஈடுபடும் எல்லா போராட்டங்களையும் நேரு 'நான்சென்ஸ்' என்று கூறுகிறார் என்கிற கோஷத்தோடு தமிழகமெங்கும் ரயில் நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. டால்மியாபுரம் என்கிற ஊரின் பெயரை 'கல்லக்குடி' என்று மாற்றும் வரை அறப்போர் தொடரும் என திமுக செயற்குழு அறிவித்தது. அதில் கலந்துகொண்ட அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத் போன்றோர் கைது செய்யப்பட்டனர். டால்மியாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலைஞர் ஆறு மாதம் சிறைத்தண்டனையும், கண்ணதாசன் 18 மாத சிறை தண்டனையும் பெற்றனர். இந்தச் சம்பவத்திற்கு பிறகே 'ராஜா ராணி' படம் எழுதப்பட்டது. அப்படத்தில் சேரன் செங்குட்டுவன் என்றொரு ஓரங்க நாடகம் இடம்பெறுவதாக கதையமைப்பு. வடதிசை நோக்கி படைகொண்டு புறப்பட அறைகூவல் விடுகிறான் செங்குட்டுவன்.
"வாளேந்தித் தமிழகத்தில் புகழேந்தி வாழும் வேங்கைப்புலிகளே! வந்துவிட்டது உங்களுக்கெல்லாம் அழைப்பு! வடநாட்டில் மீண்டுமொருமுறை நம் வீரத்தை நிலைநாட்ட நல்லதோர் வாய்ப்பு! இமயத்தில் பொறித்திருக்கும் நம் சின்னங்களைப் பழித்தார்களாம் சிறுமதி கொண்ட சிலர். புலியை கேலி செய்தான் போர்முனைக்காணா புல்லன். வில்லை இகழ்ந்தான் வீரத்தை விலை கேட்கும் வீணன். கயலைப் பழித்தான் களம் புகு கதைகளைக் கேட்டறியா கசடன்!" என்று தொடங்கும் ஒரு வீராவேச வசனம் படத்தில் இடம்பெற்றது.
இதுபோக, "சோழனோ அல்லது பாண்டியனோ என்னுடைய பகைவனாக இருக்கலாம். அதற்காக வடநாட்டு மன்னர்கள் வாலாட்ட விடமாட்டேன். என் தமிழையல்லவா இகழ்ந்தார்கள் தறுக்கர்கள்!" என்றெல்லாம் வசனம் எழுதி நேரடியாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸாரை நோக்கி சரமாரியாக கேள்விகள் எழுப்பி இருந்தார் கலைஞர்.
"களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். தசைகள் கிழித்தெறியப்படலாம். ஆனால் சுயமரியாதை ரத்தத்தின் சூடு தணியாமல் அவை கிழிக்கப்படட்டும்! முரசு தட்டுங்கள்! இமயத்தை முட்டுங்கள்!" என அறைகூவல் விடுத்திருந்தார். இந்த வசனங்கள் எல்லாம் நேரடியாகவே நேருவின் 'நான்சென்ஸ்' பேச்சை குறிப்பிட்டே எழுதப்பட்டது என்பதை மக்கள் அறிந்தே இருந்தனர். கொண்டாடினர்.
அப்போது, சிவாஜி கணேசன் 'தெனாலி ராமன்' என்றொரு படத்தில் நடித்தார். நெற்றி நிறைய திருநாமம் தரித்த கதாபாத்திரம். இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் கண்ணதாசன். அதே கண்ணதாசன் தனது 'தென்றல்' பத்திரிகையில், சிவாஜி திருப்பதி சென்றதை கேலி செய்யும் விதமாக, பெரிய நாமத்துடன் கழுத்தளவு குழியில் சிவாஜி புதைக்கப்பட்டிருப்பது போல கார்ட்டூன் வெளியிட்டார். இதற்கெல்லாம் எதிர்வினை சிவாஜி தரப்பிலிருந்தும் எழுந்தது. அதுதான் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக தொடர்ந்து தனது குரலை திரையில் பதிவுசெய்துகொண்டிருந்த தமிழரசு கட்சியின் ஏ.பி.நாகராஜனோடு இணைந்த தருணம். 'நான் பெற்ற செல்வம்' என்கிற படம் மூலம் இது நிகழ்ந்தது. இதன்பின்னர் அதே தமிழரசு கட்சியின் பொருளாளர் எம்.ஏ.வேணு "சம்பூர்ண ராமாயணம்" என்கிற படத்தை சிவாஜியை வைத்து தயாரித்தார். சிவாஜி நடித்த முதல் புராணப்படம் இதுதான். இதற்கு கதை வசனம் ஏ.பி.நாகராஜன்.
சரி, கொஞ்சம் கம்யூனிஸ்ட்களை பார்ப்போம். இந்தியா முழுதும் உள்ள முற்போக்கு, இடதுசாரி கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து மக்களுக்கான கலையை வளர்க்க "இந்திய மக்கள் கலைக் கழகம்" என்றொரு அமைப்பை நடத்திவந்தனர். அந்தக் கழகம் சார்பில் "காலம் மாறிப்போச்சு" என்றொரு படம் தெலுங்கு, தமிழ் இரண்டு மொழியிலும் ஒரேநேரத்தில் தயாரிக்கப்பட்டது. கிராமப்புற ஏழை விவசாயிகள் படும் துன்பத்தை, அன்றைய ரசனைக்கு ஏற்ப ஒரு கதையாக்கி படத்தை தயாரித்தனர். பாடல்களையும் வசனத்தையும் அன்றைய தமிழக கம்யூனிஸ்ட் பேச்சாளர்களில் ஒருவரான முகவை ராஜமாணிக்கம் எழுதினார். படம் முழுக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும்படியான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றன.
இந்நேரத்தில் கம்யூனிஸ்ட்களான எழுத்தாளர் ஜெயகாந்தனும், கவிஞர் தமிழ் ஒளியும் "நீலக்குயில்" என்றொரு மலையாள படத்தை பார்த்தனர். இந்தப் படம் கேரள தீவிர கம்யூனிஸ்ட்கள் எடுத்தது. இதைப் பார்த்ததும் "நாமும் இதுபோல் தமிழில் படம் எடுத்து சாதிக்க வேண்டும்" என்றும், ஒன்றுமே செய்யாமல் தமிழ் சினிமாவை விமர்சனம் மட்டுமே செய்துகொண்டிருந்தால், அது வேலைக்காகாது எனவும் தமிழ் ஒளி கேள்வி எழுப்பினார். இதை தனக்குள் யோசித்து உணர்ந்த ஜெயகாந்தன், "இந்தக் கொழுப்பெடுத்த சினிமாக் குதிரையை ஏறிச் சவாரி செய்து அடக்கியாக வேண்டும். அதுதான் இலக்கிய ஆண்மை" என்று முடிவெடுத்தார். திமுக எதிர்ப்பு வசனகர்த்தாவாக திகழ்ந்த ஏ.எல்.நாராயணனிடம் உதவியாளராக பணியாற்ற ஜெயகாந்தன் சம்மதித்தார்.
1956-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 25 வயது நிறைவடைந்தது. பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்தபொழுது பேசத்தொடங்கிய சினிமாவின் 25 ஆண்டு கால வளர்ச்சி அபரிதமானது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து முதன்முதலில் வங்காளத்தில் இலக்கியப் புரட்சி ஏற்பட்டது. அதுவே தேசமெங்கும் பின்னர் தீயெனப் பரவியது. கலை இலக்கியத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி பின்னர் சமுதாயத்தை சீர்திருத்தும் இயக்கமாக மலர்ந்தது. சமூகத்தில் விரவிக்கிடந்த தீண்டாமை, குழந்தைத் திருமணம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றைக் கண்டித்து, அதன் தீமைகளை விளக்கி பல திரைப்படங்கள் வெளிவந்தன. அதேபோன்று நிலப் பிரபுத்துவங்களை எதிர்த்து, முதலாளித்துவத்தை கண்டிக்கும் வகையிலும் படங்கள் தொடர்ந்து வெளிவந்தன. இதனிடையே, இந்தியா விடுதலையும் பெற்றது. ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து பிரிந்த திராவிடர் கழகம் சமூக சீர்திருத்த இயக்கமாக மாறி, திரைப்படத் துறையை முறையாக பயன்படுத்த தொடங்கியது. பகுத்தறிவுக்கொள்கையும், கடவுள் மறுப்பு விவாதமும், சமூக சீர்திருத்த கருத்துக்களும் காட்சிகளாக மாறி திரையில் ஜொலித்தன.
மிக முக்கியமாக, சுதந்திரத்திற்குப் பின் மின்சார வசதி சிறு கிராமங்களையும் சென்றடைந்தது. இதனால் டூரிங் டாக்கீஸ்கள் நிறைய உருவாகின. 1947-க்கு முன்புவரை வெளிவந்த படங்களை கிராமப்புற மக்கள் தரிசிக்க வழியில்லாமல் இருந்தது. அந்தக் குறை இதன்மூலம் நீங்கியது. சினிமாவின் சக்தியை புரிந்தவர்களாக திமுகவினர் விளங்கினர். 1956 வரை மொத்தம் 627 திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. அதில் 1951-ல் இருந்து 1956 வரை சமூகப் படங்களே அதிகளவில் வெளியாகின. மிகக் குறிப்பாக, 1955-ல் வெளிவந்த 34 படங்களில், 26 படங்கள் சமூகப் படங்களே! புராண, சரித்திரப் படங்கள் வருவது அறவே நின்றுபோயின என்றும் கூட கூறலாம்.
அரசியலிலும் கூட அதிவேக மாற்றங்கள் நிகழ இருந்த காலகட்டம் அது. காங்கிரஸின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒரு பருவத்தை அடுத்து நாம் காணப்போகிறோம்.
- பால கணேசன்
> முந்தைய அத்தியாயம் > திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!