திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!

திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!

எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில் 'மலைக்கள்ளன்' படத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு. இந்தப் படத்தின் கதையை முதலில் தேசியக் கவிஞர் வெ.ராமலிங்கம் ஒரு நாவலாக எழுதியிருந்தார். அதை ஸ்ரீராமுலு நாயுடு வாங்கி, ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் தயாரித்தார். ஆறு மொழியிலும் ஆறு வேறு வேறு நாயகர்கள். தமிழில் எம்ஜிஆர். வசனம் மு.கருணாநிதி. சற்றும் அரசியல் கலப்படம் இல்லாத வசனங்களை எழுதி வாங்கினர் தயாரிப்புத் தரப்பினர்.

இந்தப் படத்தில்தான் முதன்முறையாக எம்ஜிஆர் "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..." என்று குதிரை மீதமர்ந்து சவாரி செய்தபடி ஒரு தத்துவப் பாடல் பாடினார். அந்தப் படத்தில் இருந்து பின்னாட்களில் தான் நடிக்கும் எல்லா படங்களிலும் குறைந்தபட்சம் ஒரு தத்துவ பாடலாவது இடம்பெற்று விடவேண்டும் என்று முடிவெடுத்தார். வரலாற்று சிறப்புமிக்க முடிவு அது. தமிழ் திரையுலகை மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் அந்தப் பாடல்கள் மிகப் பெரிய பங்கு வகித்தன.

இந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரியும் எல்லா படங்களும் நன்றாக வசூலைக் குவிப்பதாக தயாரிப்பாளர்கள் நினைக்கத் தொடங்கினர். இதில் திராவிட இயக்கத்தைச் சேராத தயாரிப்பாளர்களும் அடக்கம். அந்த வகையில் விருதை.ந.ராமசாமி என்கிற திராவிட இயக்க எழுத்தாளரின் வசனத்தில் 'என் மகள்' என்றொரு படத்தை தயாரித்து வெளியிட்டனர். ரஞ்சன் நாயகன். ரஞ்சன் திறமையான நடிகர்தான் என்றாலும் கூட அவரது தமிழில் சற்றே பிராமண வாசம் அடிக்கும். இதன் காரணமாக இந்தப் படத்தை திராவிட இயக்க ஆதரவாளர்கள்கூட திரும்பிப் பார்க்கவில்லை. படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.

இந்த இடத்தில் நாம் நடிகவேள் எம்.ஆர்.ராதா பற்றி பேசியாகவேண்டும். அதற்கு காரணம் இருக்கிறது. 1940-ஆம் ஆண்டு 'சத்தியவாணி' என்கிற படத்தில் நாயகனாக நடித்த எம்.ஆர்.ராதா, அதோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, நாடகங்களில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வந்தார். தமிழ் சினிமா மக்களிடையே பிரபலமான பின்பும்கூட நாடக உலகில் முடிசூடா மன்னராக அவர் விளங்கிவந்தார். 'ரத்தக்கண்ணீர்', 'தூக்குமேடை', 'லட்சுமிகாந்தன்' போன்றவை அவரது புகழ்பெற்ற நாடகங்கள். இன்னும் சரியாக கூறவேண்டுமானால் சினிமா நடிகர்களை விட மிகவும் புகழ்பெற்று விளங்கிய நாடக நடிகர் என்றே சொல்லலாம். இவர் நாடகம் நடக்கும் இடங்களிலெல்லாம் கூட்டம் அள்ளும்.

திராவிடர் கழக பிரிவின்போது திமுகவை நோக்கி பலர் நகர, எம்.ஆர்.ராதா பெரியாருடனே தங்கிவிட்டார். நாடகத்தில் என்ன கதை, என்ன காட்சி என்று எதுவும் பாராமல் மக்கள் இவரது பேச்சுக்கும், நடிப்புக்காகவும் மட்டுமே கூட்டம் கூட்டமாக சென்றனர். அன்றாட நாட்டு நடப்புகளுக்கு அன்று மாலையே இவரது நாடகத்தில் விமர்சனம் கிடைக்கும். எந்த ஊரில் நாடகம் நடக்கிறதோ, அந்த ஊரின் சீர்கேடுகளுக்கு அவரது நாடகம் வாயிலாக கண்டனம் தெரிவிப்பார். காவல்துறை அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் இன்றைய நாடகத்தில் எங்கே கண்டனப்பொருளாக தங்கள் ஊழல் வெளிவந்துவிடுமோ என அஞ்சும் வண்ணம் ஒரு சிங்கம்போல இருந்தார் ராதா.

அவரது 'ரத்தக்கண்ணீர்' நாடகத்தை திரைப்படமாக எடுக்க நேஷனல் பிக்சர்ஸ் முடிவெடுத்தது. எம்.ஆர்.ராதாவே நாயகனாக நடித்தார். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றினார் ராதா. நாடகங்களில் பகுத்தறிவு கருத்துக்கள் சொன்னவர், அதைவிட உக்கிரமாக திரையில் முழங்கினார். திராவிடக் கருத்துக்களை எளிமையான மொழியில், நல்ல நையாண்டியுடன் திரையில் எடுத்துரைத்த எம்.ஆர்.ராதா இறுதிவரை எந்தக் கட்சியையும் சாராமல் இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. உண்மையில் எம்.ஆர்.ராதா திராவிடக் கட்சியில் உறுப்பினராக இருந்திருந்தால் தமிழக அரசியல் சரித்திரம் இன்னும் களைகட்டி இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அதற்கான வாய்ப்பை ராதா யாருக்குமே தரவில்லை. பொதுவான திராவிடக் கொள்கை அவரிடம் இருந்தாலும் கூட தனக்கென தனிப்பாதை ஒன்றை அவர் வைத்திருந்தார். அதை இறுதிவரை அவர் மீறவேயில்லை. இன்னும் இந்தத் தொடரின் இடையில் அடிக்கடி எம்.ஆர்.ராதா தென்படுவார். காத்திருங்கள்.

ஏ.பி.நாகராஜனுக்கு 1954, 1955-ஆம் வருடங்களில் மொத்தம் ஐந்து திரைப்படங்கள் வெளிவந்தன. அதில் முக்கியமானது 'நல்லதங்கை' என்றொரு படம். இந்தப் படத்தின் வசனங்களில் பல இடங்களில் அவர் திராவிட எதிர்ப்புக் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் ஒரு பாடல் காட்சியில்,

"மெத்தப் படித்தவர் போலவே
நீங்க வெளுத்து வாங்குறீங்க - அண்ணா
வேஷம் போடுறீங்க!
வெத்து வேட்டுகள் விடவேணாங்க!

அர்த்தம் அனர்த்தம் எல்லாம் தெரிஞ்ச
அறிஞராயிட்டீங்க அண்ணா
அறிஞராயிட்டீங்க!" - என்று நேரடியாக அறிஞர் அண்ணாவை தாக்கும் வரிகள் இடம்பெற்றிருந்தது.

அதேபோல் கலைஞரின் 'மனோகரா' படத்திற்கு எதிராக 'பெண்ணரசி' என்றொரு படம் எடுத்து கலைஞர் போலவே தனக்கும் அடுக்குமொழி வசனம் வரும் என்பதை கூறும்வண்ணம் எழுதினார். ஆனால் படம் தோல்வியைத் தழுவியது. கதாநாயகனாகவும் அவரே நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்திக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தார். காரணம், கல்கண்டு இதழ் நடத்தி வந்த தமிழ்வாணன் 'பெண்ணரசி' படத்தில் நாகராஜனின் நடிப்பைப் பார்த்துவிட்டு, "எருமைக் குரலோன் ஏ.பி.,நாகராஜன்" என்று கிண்டல் செய்திருந்தார். தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்வாணனுக்கும் ஏற்கெனவே பிரச்னைகள் இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

1955-ல் நடந்த சரித்திரப் புகழ்பெற்ற சம்பவம் என்றால், அது சிவாஜி கணேசன் திருப்பதி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததுதான். திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியையும், காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் தந்த சம்பவம் அது. சிவாஜி எதற்காக திருப்பதி போனார் என்றெல்லாம் தெரியாது. ஆனால் "கழகப் பிரசார நடிகன்" என்ற பட்டத்திலிருந்து விடுபட்டால்தான் பல்வேறு பட அதிபர்களின் படங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிட்டும் என்றெண்ணியே அவர் திருப்பதி சென்றார் என திமுகவினர் குற்றம்சாட்டினர்.

"திருப்பதி கணேசா! திரும்பிப்பார் நீ நடந்து வந்த பாதையை! நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?" என்று திமுகவை சேர்ந்தவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசினார்கள். ஏனென்றால் நாத்திகராக இருப்பது தி.மு.கழகத்தின் உயரிய நடைமுறையாக இருந்த காலகட்டம் அது. திருப்பதி தரிசனம் காரணமாக கழகத்திற்கு வெளியே தன்னைக்கொண்டு போய் நிறுத்திக்கொண்டார் சிவாஜி. இன்னொருபக்கம் அறிஞர் அண்ணா, "தம்பி கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தினார். இதேநேரத்தில் சிவாஜி தி.மு.கழகம் தொடர்புடைய இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதில் கலைஞர் கதை-வசனம் எழுதிய 'ரங்கோன் ராதா' படமும் ஒன்று. அந்தப் படத்தில் சிவாஜிதான் நடிக்கவேண்டும் என்று அண்ணாவே விரும்பி பரிந்துரை செய்ததும் குறிப்பிடத்தக்கது. அறிஞர் அண்ணா கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை கையாண்ட விதத்திற்கும், அதே கட்சியை சேர்ந்த மற்றவர்கள் கையாண்ட விதத்திற்கும் இருந்த பெரும் வேற்றுமையே பல விஷயங்களை நமக்கு இன்றும் உணர்த்துவதாக இருக்கிறது.

1956-ல் வந்த 'மதுரை வீரன்' திரைப்படம் எம்ஜிஆருக்கு ஒரு மைல்கல்லாக இருந்தது என்றால் அது மிகையில்லை. 'மதுரை வீரன்' என்கிற அந்த தெய்வம், ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்கும் தெய்வம். அந்த மதுரைவீரனது சாகசங்களை பல்வேறு கதைகளாக வடித்து வழிவழியாக வணங்குவது இன்றும் நடைமுறையில் இருக்கும் ஒன்று. அத்தகைய மதுரைவீரனாக நடித்த எம்ஜியாரை கண்ட கிராமத்து ஏழை மக்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். ஒரு உயர் சாதிப் பெண் தங்கள் மதுரைவீரனை காதலிப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள். கட்டுக்காவலை உடைத்து, மீறி, அவளை மதுரை வீரன் தூக்கிக்கொண்டு வருவதைக் கண்டு புல்லரித்துப் போனார்கள். கண்ணதாசனின் வசனத்தில் அந்தக் கதாபாத்திரம் உயிர்த்தெழுந்து வந்திருந்தது படத்தில். அதுவரை தமிழ் சினிமா காணாத வெற்றியையும் கண்டது.

ஏற்கெனவே 'குலேபகாவலி' படத்தில் சிங்கத்துடன் மோதி வெற்றிகொண்ட எம்ஜிஆர், தேவர் பிலிம்ஸின் முதல் படமான 'தாய்க்குப் பின் தாரம்' படத்தில் பெரியகுளம் காளைமாட்டுடன் பயங்கரமாக மோதி வெற்றிகண்டார். எம்ஜிஆர் இப்படியாக வீரதீர பராக்கிரமம் கொண்ட இளைஞனாகவும், அதேநேரத்தில் பெண்களை மதிக்கும் மனிதனாகவும், மக்களுக்காக போராடும் மாவீரனாகவும் தொடர்ந்து திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்தார். அதற்கு பெரும் வரவேற்பு இருந்தது.

இந்த நேரத்தில் கலைஞர் கருணாநிதிக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் ஏற்கெனவே இருந்த சிறு மனத்தாங்கல் இப்போது அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. இருவருமே அப்பொழுது தி.மு.கழகத்தில்தான் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனத்தாங்கல் பின்னர் பல்வேறு சிக்கல்களை உருவாக்கியது.

சிக்கல்கள் இல்லாமல் அரசியல் ஏது? அதில் திரைப்படங்களும் ஒன்றாய் சேர்ந்துகொண்டதே நம் வரலாறு.

- பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com