திரையும் தேர்தலும் 4 - பாரதியாரும் கம்யூனிஸ்டுகளும்; 'பராசக்தி' உருவானதன் பின்புலம்!

திரையும் தேர்தலும் 4 - பாரதியாரும் கம்யூனிஸ்டுகளும்; 'பராசக்தி' உருவானதன் பின்புலம்!
திரையும் தேர்தலும் 4 - பாரதியாரும் கம்யூனிஸ்டுகளும்; 'பராசக்தி' உருவானதன் பின்புலம்!

இந்திய அரசியலில் ஆரம்பம் தொட்டே கம்யூனிஸ்டுகள் பங்கும் இருந்திருக்கிறது. ஆனால், பிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்டுகளை அவ்வப்போது தடை செய்ததால் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய சூழலும் நிலவியது. அதையும் மீறி கம்யூனிஸ்டுகள் தங்கள் குரலை பதிவு செய்தவண்ணமே இருந்தனர். தோழர் ஜீவானந்தம் போன்றவர்கள் மீது மக்களுக்கு அபிமானம் இருந்தாலும்கூட காங்கிரஸ் போன்ற பேரியக்கங்கள் மகாத்மா காந்தியின் நிழலில் இருந்ததைப்போன்று, பலமான பெயர் சொல்லும் தலைவர்களோ அல்லது மக்கள் பின்பற்றி நடக்கும்படியானவர்களோ கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாமல் போனது ஒரு பெரும் பின்னடைவு என்றே கூறலாம்.

அதையும் மீறி பாரதியார் பாடல்களை நாட்டுடைமையாக்கியதின் பின்னணியில் கம்யூனிஸ்டுகளே இருந்தனர். 'நாம் இருவர்' என்றொரு நாடகம் மிகவும் புகழ்பெற்று விளங்கிய காலகட்டத்தில், அதைப் படமாக்க ஏ.வி. மெய்யப்ப செட்டியார் விரும்பினார். நாடகத்தில் இடம்பெற்றிருந்த பாரதியார் பாடல்களே அதன் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதை உணர்ந்த அவர், தான் தயாரிக்கப்போகும் படத்திலும் அப்பாடல்கள் இடம்பெறவேண்டும் என்று விரும்பினார். ஆனால், பாரதியார் பாடல்களின் உரிமைகளோ சுராஜ்மால் அண்ட் சன்ஸ் என்கிற நிறுவனத்தாரிடம் இருந்தது. வெறும் 600 ரூபாய் கொடுத்து பாரதி குடும்பத்திடமிருந்து அந்த உரிமையை பெற்றிருந்தனர் அவர்கள்.

இதை அறிந்த ஏ.வி.மெய்யப்பன், அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் பேசினார். அந்த நிறுவனம் கிராமஃபோன் தட்டில் பதிவதற்காகவே பாரதியார் பாடல்களை வாங்கிவைத்திருந்தது. ஆனால், சில பொருளாதார காரணங்களால் அந்த நிறுவனம் அந்தத் தொழிலையே கைவிட்டிருந்தது. இதை அறிந்த மெய்யப்பன் செட்டியார், "சரி ஒரு இரண்டாயிரமோ அல்லது மூவாயிரமோ கொடுத்து வாங்கிவிடலாம்" என்று போனால், அந்த முதலாளியோ, "ரூ.10,000-க்கு குறைவாக ஐந்து பைசா கொடுத்தாலும் உரிமையை தரமாட்டேன்" என்று கூறிவிட, மெய்யப்பன் செட்டியார் "உடனே எழுதுங்கள் அக்ரிமெண்டை" என்று கூறி பாரதியார் பாடல்களை தன்வசமாக்கினார். காங்கிரஸ் ஆதரவு கருத்துக்களை கொண்டிருந்த 'நாம் இருவர்' படமும் மெகா ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து டி.கே.எஸ் சகோதரர்கள் 'பில்ஹணன்' என்றொரு படம் எடுத்தார்கள். அதில் பாரதியார் பாடல்களை பயன்படுத்தி இருந்தனர். இதை அறிந்த மெய்யப்பன் செட்டியார், "பாரதி பாடல்களை படத்திலிருந்து உடனடியாக நீக்காவிடில் நஷ்டஈடு கோரி வழக்கு தொடருவேன்" என்று ஒரு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சில நாள்களுக்கு முன்புதான் எட்டையபுரம் பாரதி மணிமண்டப திறப்பு விழாவில் "பாரதி பாடல்கள் தமிழகத்தின் பொதுவுடைமை" என்கிற முழக்கத்தை கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் முன்னெடுத்திருந்தார். இதை நினைவில் வைத்திருந்த டி.கே.எஸ், பாரதி குடும்பத்தாரிடம் சென்று "பாரதியார் பாடல்களை நாட்டுடமை ஆக்குவதில் குடும்பத்தாருக்கு எதுவும் ஆட்சேபனையில்லை" என்று கூறியும், கம்யூனிஸ்ட் தலைவரின் உரையை குறிப்பிட்டும் பேசி, பத்திரம் எழுதி கையொப்பம் வாங்கிவைத்தார். திருமதி.செல்லம்மா பாரதி மற்றும் தங்கம்மா பாரதி இருவரும் அதில் கையொப்பம் இட்டிருந்தனர்.

பின்னர் டி.கே.எஸ், அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை தொடர்புகொண்டு பேசியதும், உடனே மெய்யப்ப செட்டியாரை சந்திக்கவேண்டும் என முதல்வர் விரும்பினார். இரவு எட்டு மணிக்கு அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மெய்யப்ப செட்டியாரிடம் முதல்வர் "பாரதியார் பாடல்கள் பொக்கிஷங்கள். அதை ஒருவர் சொந்தம் கொண்டாடுவது சரியாகாது. நீங்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் அதை அரசாங்கம் தர தயாராக இருக்கிறது" என்று எடுத்துக் கூற, அதைக்கேட்ட மெய்யப்ப செட்டியார், "பாரதியார் பாடல்களை இந்தக் கணமே நாட்டுடைமையாக்க கையெழுத்து இட்டுத் தருகிறேன். எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம்" என்று கூறினார். பாரதியின் பாடல்கள் நாட்டுடமை ஆனது. இன்றளவும் இந்த வரலாற்று புகழ்மிக்க சம்பவத்திற்கு பின்னால் இருப்பது கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான் என்பதே பலருக்கு தெரியாது.

இப்படி கலையும் அரசியலும் நம் மாநிலத்தின் இரு கண்கள் என்றே நம் தலைவர்கள் ஆரம்பம் தொட்டே இருந்துவந்துள்ளனர். வரலாறு முழுக்க அதற்கான உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால், காங்கிரஸார் அதை வசதியாக மறந்துபோனதன் விளைவு, அப்போது அவர்களுக்கு புரிந்திருக்கவில்லை. தமிழகத்து பொதுக்கூட்ட மேடைகளில் அறிஞர் அண்ணாவும், மு.கருணாநிதியும், பிற திராவிட இயக்க இளைஞர்களும் நல்ல தமிழில், அழகிய நடையில் ஏழைகளின் பிரச்னைகளை பற்றிப் பேசினார். ஆனால். இன்னொரு புறமோ, "போலோ மஹாத்மா காந்திக்கு ஜே!" என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். உணவுப் பஞ்சதால் அவதியுற்றிருந்த மக்கள், காங்கிரஸ் கூட்டங்களுக்கு செல்வதையே தவிர்த்தனர். "சகோதர சகோதரிகளே நமஸ்காரம்" என்று காங்கிரஸார் பேசத் தொடங்குவதையே மக்கள் வெறுத்தனர். இந்தித் திணிப்பை அவர்கள் பேச்சில் உணர்ந்தனர். இன்னொரு பக்கம் கம்யூனிஸ்டுகள் காடுகளிலும் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், பெரியார் 1949-ஆம் ஆண்டு ராஜாஜியை மணியம்மையோடு இணைந்து சென்று சந்தித்துப் பேசினார். அந்தத் தகவல், மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக மாறின. அதன்பின் நடந்த கோவை முத்தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணா "ராஜாஜி - பெரியார் சந்திப்பு பற்றிய ரகசியத்தை பகிரங்கமாக வெளியிடவேண்டும்" கேட்டுக்கொண்டார். "ராஜாஜியை சந்தித்தது சொந்த விஷயமே தவிர திராவிடர் கழகத்திற்கும் அதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று இறுதியில் பேசிய பெரியார் குறிப்பிட்டார். இதன்பின்னர் பெரியார், மணியம்மை அவர்களை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார். திராவிடர் கழகத்தின் முதல் பெரும் விரிசல் அதனால் ஏற்பட்டது.

பின்னர் அதே 1949-ல் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டம் ஒன்றில் அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகம் என்கிற கட்சி ஆரம்பிக்கவேண்டியதன் அவசியத்தை பேசினார். அண்ணாவையே அதற்கு பொதுச்செயலாளராக இருந்து பணிபுரியும்படி கட்சியின் அமைப்புக்குழு கேட்டுக்கொண்டது. 110 பேர் கொண்ட பொதுக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, பாரதிதாசன், டி.வி.நாராயணசாமி, ஏ.கே.வேலன் ஆகியோர் ஏற்கேனவே திரைப்படத்துறையில் ஈடுபட்டிருந்தனர். 17.09.1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது.

அறிஞர் அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தை கண்ட கல்கி கிருஷ்ணமூர்த்தி," இதோ ஒரு பெர்னாட்ஷா தமிழகத்தில் இருக்கிறார்! இப்சனும் இருக்கிறார்! கால்ஸ் வொர்த்தி கூட இருக்கிறார்!" என புகழாரம் சூட்டினார். இதை எல்லாம் ஏ.வி.எம் நிறுவனம் கவனித்துக்கொண்டிருந்தது. காங்கிரஸ் செல்வாக்கோடு இருந்தபொழுது 'நாம் இருவர்' படம் எடுத்த அதே ஏவிஎம், இப்போது திராவிடர் இயக்கம் வளர்ந்துகொண்டிருப்பதை பார்த்து 'ஓர் இரவு' நாடகத்தை படமாக எடுக்க முடிவுசெய்தது. அறிஞர் அண்ணாவை தொடர்புகொண்டனர். ஒரு வாரத்திற்குப் பிறகு ஏவிஎம் ஸ்டூடியோ வந்த அண்ணா, ஒரே இரவில் 300 பக்கங்கள் கொண்ட திரைக்கதை ஒன்றை எழுதிக்கொடுத்தார். படத்தை பா.நீலகண்டன் இயக்குவதாக முடிவானது.

அதேநேரத்தில் ஏவிஎம் எடுத்த 'நாம் இருவர்', 'வேதாள உலகம்', 'வாழ்க்கை' ஆகிய படங்களின் சென்னை நகர் விநியோகஸ்தர் பி.ஏ.பெருமாள், ஏவிஎம்மோடு இணைந்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டார். அப்போது கடலூரில் தேவி நாடக சபா சார்பில் 'பெண்', 'மனோகரா', 'பராசக்தி' ஆகிய நாடகங்கள் நடந்துகொண்டிருந்தன. திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பாவலர் பி.பாலசுந்தரம் எழுதிய 'பராசக்தி' நாடகம் மிகவும் புகழ்பெற்றிருந்தது. அந்த நாடகத்தை எந்த ஊரில் நடத்தினாலும் அந்த ஊர் சினிமா கொட்டகையில் வசூல் குறைந்துவிடும். அந்த அளவு மக்களால் விரும்பப்பட்ட நாடகம் அது. அந்த 'பராசக்தி' நாடகத்தை பார்க்க மெய்யப்பச் செட்டியாரை அழைத்துக்கொண்டு போனார் பெருமாள். அவருக்கு நாடகம் மிகவும் பிடித்துவிட்டது. நாடகத்தை விலைகொடுத்து வாங்கினார்.

அறிஞர் அண்ணாவின் 'நல்ல தம்பி' படத்தை இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சு, 'பராசக்தி' படத்தையும் இயக்க முடிவானது. ஏற்கெனவே சில படங்கள் மூலம் வசனம் எழுதி புகழ்பெற்றிருந்த மு.கருணாநிதி வசனம் எழுத ஒப்பந்தமானது. அப்போது திமுகவின் பிரதான கலைஞராக விளங்கிய கே.ஆர்.ராமசாமியை நாயகனாக நடிக்கவைக்கலாம் என்று மெய்யப்பச் செட்டியார் விரும்பினார். ஆனால் பெருமாளோ, "விதி, 'நூர்ஜஹான்' போன்ற நாடகங்களில் கணேசன் என்றொரு இளைஞன் நன்றாக நடிப்பதைக் கண்டேன். அவரையே நாயகனாக போடலாம்" என்கிற கருத்தை தெரிவித்தார். ஆனால், "டிராமாவில் நடிப்பது வேறு... சினிமாவில் நடிப்பது வேறு... இதுவரை எந்தப் படத்திலும் நடித்திராத ஒருவரை மெயின் ரோலில் போட்டு படம் எடுப்பது ஆபத்தானது" என்று மெய்யப்பச் செட்டியார் தனது கருத்தை தெரிவித்தார். ஆனால், பெருமாள் பிடிவாதமாக இருந்தார்.

கணேசன் என்கிற சிவாஜி கணேசன், நாயகனாக ஆன வரலாறு இது.

(திரை இன்னும் விரியும்...)

- பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com