மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் நடிகை தமன்னா
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை தமன்னா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் நடிகை தமன்னாவின் பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க தமன்னா ஹைதராபாத் சென்றபோது கொரோனா தொற்று ஏற்பட்டு ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”நானும் எனது படக்குழுவினரும் ஷூட்டிங்கில் கொரோனா விழிப்புணர்வுடன் இருந்தபோதும் துரதிர்ஷ்டவசமாக கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்கு ஆளானேன். கட்டாய பரிசோதனைகளை மேற்கொண்டபோது, எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். மருத்துவ நிபுணர்களின் தொடர் சிகிச்சையால் உடல்நலம் சரியாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். மருத்துவமனையில் இருந்த இந்த ஒருவாரம் கடினமாக இருந்தாலும் இப்போது உடல் நலமாக இருப்பதை உணர்கிறேன்.
உலகெங்கிலும் பலரை துன்பப்படுத்தும் கொரோனாவிலிருந்து நான் முழுமையாக குணமடைவேன் என்று நம்புகிறேன். இப்போதைக்கு, நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். அனைவருடைய அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி. எல்லோரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.