ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு படங்களை தொடர்ந்து மற்றொரு ஸ்போர்ட்ஸ் படத்தை இயக்குநர் சுசீந்திரன் தொடங்கியுள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன் 2009 ஆம் ஆண்டு ‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் மூலம் இயக்குநராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே விளையாட்டை மையமாக வைத்து எடுத்தார். இந்தப் படத்திற்கு ஓரளவிற்கு வரவேற்பு இருந்தது. கபடி விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், விளையாட்டில் சாதியும், பணமும் எப்படி நுழைகிறது என்பதை சாடியிருந்தார். அதன் பிறகு ‘நான் மகான் அல்ல’,‘அழகர் சாமியின் குதிரை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். விளையாட்டை மையமாக கொண்டு அவர் எடுத்த இரண்டாவது படம் ஜீவா. கிரிக்கெட்டில் சாதி எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்ற கருத்தினை வெளிப்படையாக பேசி இருந்தார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இப்படம் எதிர்பார்த்தளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில், சுசீந்திரன் அடுத்ததாக கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். `சாம்பியன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருப்பதாக சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சில போஸ்டர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். ‘சாம்பியன்’ படத்திற்கு அரோல் கொரேலி இசையமைக்கிறார். கஜித் சாரங் ஒளிப்பதிவும், தியாகு படத்தொகுப்பு செய்கிறார்கள். கே.ராகவி இந்தப் படத்தை தயாரிக்கிறார். மிருணாளினி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
மேலும், படப்பிடிப்பு குறித்து கடிதத்தையும் சுசீந்திரன் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து `சாம்பியன்' என்ற திரைப்படத்தை துவங்கி உள்ளோம். ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’ திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரோஷன் என்ற புதுதுமுக ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.