மீண்டும் ரிலீஸாகும் சூர்யாவின் அஞ்சான்.. சத்தியமா இது உண்மைங்க..!
வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் 42வது பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி சூர்யா நடித்து கடும் கலாய்ப்புக்கு உள்ளான ‘அஞ்சான்’ படம் ரசிகர்களால் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாஸ் ஹீரோக்கள் என்று சொன்னால் அது அஜித், விஜய்தான். அதற்கு அடுத்து அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஹீரோ என்று சொன்னால் சூர்யா, விக்ரம், தனுஷ் என்று சொல்லலாம். அஜித், விஜய் படங்கள் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படாது. ஏனென்றால் அவர்களுடைய ரசிகர்களே படத்தை பலமுறை பார்த்து ஓட வைத்து விடுவார்கள். ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு அப்படி அல்ல. தேவையில்லாமல் பெரிய விளம்பரம் செய்து, பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கி, படம் சரியில்லை என்றால் அவ்வளவுதான். மக்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து தள்ளிவிடுவார்கள். அப்படி ஒரு பேரழிவை சந்தித்த படம்தான் அஞ்சான்.
அஞ்சான் படத்தின் டிரெய்லர் சூப்பர் ஹிட். போதாக் குறையாக ஏகப்பட்ட விளம்பரம் செய்து எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டனர் படக்குழுவினர். ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஞ்சான் படத்தினர் இயக்குனர் லிங்குசாமி, “நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்தில் இறக்கியிருக்கிறேன்” என்று சொன்னார். ஆனால் படமோ அவர்கள் பில்டப் கொடுத்ததைப் போன்று ஒன்றும் இல்லை. எனவே ஆத்திரமடைந்த நெட்டிசன்கள், படத்தையும், லிங்குசாமி சொன்ன “கத்துகிட்ட மொத்த வித்தை” டயலாக்கையும் வைத்து கலாய்த்துத் தள்ளிவிட்டனர். இதனால் சூர்யாவும், லிங்குசாமியும் நொந்து நூலாகிவிட்டனர்.
இப்படிப்பட்ட வரலாறு கொண்ட ‘அஞ்சான்’ படத்தை சூர்யாவின் ரசிகர்கள், வரும் ஜூலை 23 அவர் பிறந்தநாளில் மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் அல்ல; கேரளாவில். எதார்த்த சினிமாவுக்கு பேர் போன கேரளாவில் தோல்வியடைந்த மசாலா படத்தை ரீ-ரிலீஸ் செய்து பார்க்கும் சேட்டன்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.