2022-ம் ஆண்டில் எதிர்பார்த்ததை காட்டிலும் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த 6 தமிழ் படங்கள்!

2022-ம் ஆண்டில் எதிர்பார்த்ததை காட்டிலும் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த 6 தமிழ் படங்கள்!
2022-ம் ஆண்டில் எதிர்பார்த்ததை காட்டிலும் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த 6 தமிழ் படங்கள்!

கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கை எல்லாம் மக்கள் மறந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். யாரும் பெரிதாக எதிர்பார்த்திராத இந்த ஊரடங்கு உலகையே புரட்டிப் போட்ட நிலையில், திரையுலகையும் இது விட்டுவைக்கவில்லை. இதனால் மக்கள் ஓ.டி.டி. பக்கம் சென்றுவிட்ட நிலையில், அவர்களை திரையரங்கிற்கு வரவழைப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது. தமிழகத்தில் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களின் படங்கள் என்றால், பெரிதாக விளம்பரம் தேவைப்படாமலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து விடுவார்கள். ஆனால், இதையெல்லாம் தாண்டி, இந்தாண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சர்ப்ரைஸ் ஆக ஹிட்டடித்து, திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தப் படங்களும் உள்ளன. இதுகுறித்து இங்குப் பார்க்கலாம்.

1. லவ் டுடே

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் ‘லவ் டுடே’. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் கதாநாயாகனாகவும் அறிமுகமான நிலையில், கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்தப் படம் இவ்வளவு ஹிட் அடிக்கும் என்று இயக்குநர், தயாரிப்பாளரைத் தவிர வேறு யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஏனெனில் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், முன்னணி நடிகர்கள் என்று யாரும் இல்லாமலே, 2k கிட்ஸ்களை கவரும் வகையில் கதைக்களம் அமைத்து எடுக்கப்பட்டதால், இளைஞர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது.

இதனால் சுமார் 8 நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது போன்றோ அல்லது ரீமேக்காக இந்தியில் மாற்றம் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தவிர்க்க முடியாத இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசையும், யோகி பாபு, சத்யராஜ் மற்றும் ராதிகா சரத்குமாரின் நடிப்பும் இந்தப் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. இதுவரை 90 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

2. சர்தார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக கார்த்தி இருந்து வந்தாலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தப் படம் இந்தாண்டு வெளியான ‘சர்தார்’. எதிர்பார்த்த வெற்றியை விட நல்ல வரவேற்புப் பெற்றது இந்தப் படம். தண்ணீர் பாட்டிலை வைத்து நடக்கும் அரசியல், உளவாளி என இருகதைகள் படத்தில் இருந்தாலும், மக்களை ஈர்க்க தவறவில்லை. இதனால், இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத்தாண்டியது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இதேபோல் சோலாவாக நடித்த‘விருமன்’ படத்திற்கும், மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

3. திருச்சிற்றம்பலம்

பல வெற்றிப் படங்களை தந்த தனுஷ், கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘அசுரன்’ படத்திற்குப் பிறகு பெரிதாக சோபிக்கவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் வெளியான ‘மாறன்’ திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில், அதன்பிறகு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’. இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையென்றாலும் தனுஷின் கதாபாத்திரம் அவரை உலக அளவில் பிரபலப்படுத்தியது. எனினும், எதிர்பார்ப்புகளை மீறி தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றது. இந்தப் படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

4. டான்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட வெற்றியைத் தொடர்ந்து வெளியான திரைப்படம் ‘டான்’. எதிர்பார்ப்புகளை மீறி இந்தப் படமும் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது. சிவகார்த்திகேயனுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம், விஜய், அஜித் போன்று இருந்தாலும், கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது, ரசிகர்களை ஈர்த்தது. இதனால் சிவகார்த்திகேயனின் கிராஃப் சற்று ஏறியது. ஆனால் அதன்பிறகு கார்த்தியின் ‘சர்தார்’ படத்துடன் வந்த ‘பிரின்ஸ்’ படம் தோல்வியடைந்தது.

5. ராக்கெட்ரி: நம்பி விளைவு

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 25 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இயக்குநராக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான மாதவன், அதை சிறப்பாக செய்து பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தத் திரைப்படம், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருந்தது.

6. டாணாக்காரன்

விக்ரம் பிரபு நடிப்பில் ஓடிடியில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. ஓடிடியில் வெளியானாலும், பீரியட் படமாக, காவல்துறை பயிற்சியின் போது நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது இந்தப் படம். விக்ரம் பிரபுக்கு இந்தப் படம் மிகப்பெரிய கேரியர் பிரேக் கொடுத்தது. ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சர்ப்ரைஸ் ஹிட் அடித்தப் படங்களின் வரிசையில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

2022-ம் ஆண்டில் வித்தியாசமான கதையால் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்கள் குறித்த தொகுப்பை நாளைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com