கே.வி.ஆனந்த் இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் சூர்யா 4 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் கசிய தொடங்கியுள்ளது.
செல்வராகவன் இயக்கும் ‘என்ஜிகே’ படத்தில் தற்போது சூர்யா நடித்து முடித்துள்ளார். அடுத்து சூர்யாவின் 37வது படத்தை கே.வி. ஆனந்த் இயக்க உள்ளார். ஏற்கெனவே இவரது இயக்கத்தில் சூர்யா, ‘அயன்’,‘மாற்றான்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். வியாபார ரீதியாக சூர்யாவுக்கு ‘அயன்’ நல்ல பெயரை சம்பாதித்து தந்தது. வெற்றிக் கூட்டணியாக கருதப்படும் இருவரும் மீண்டும் இணைவதால் அவரது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இந்த மாதம் 25ம் தேதி படக்குழு லண்டன் செல்ல உள்ளது. அங்கே உள்ள கவர்ச்சிகரமான நகரங்களில் விதவிதமாக படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர்.
இந்நிலையில் இந்தப் படத்தில் நான்கு வேடங்களில் சூர்யா தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாற்றான்’ படத்தில் சூர்யாவை இரு வேடங்களில் தோன்ற வைத்த இயக்குநர் ஆனந்த், அவரது அடுத்த படைப்பான இந்தப் படத்தில் 4 வெவ்வேறு வேடங்களில் சூர்யாவை நடிக்க வைக்க உள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க இருக்கிறார். ஆகவே படத்தை பற்றிய எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே வருகிறது.