நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ’என்.ஜி.கே’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது.
அதில் சூர்யா சேகுவாரா கெட் அப்பில் இருந்ததை கண்டு ரசிகர்கள் உற்சாகமாகினர். ஆனால், செல்வராகவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதற்காக சூர்யா ரசிகர்களிடம் செல்வராகவன் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டார்.
இதைத்தொடர்ந்து இந்தப் படத்துக்காக ஒதுக்கிய தேதிகள் முடிவடைந்த நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் வேறு ஒரு கெட் அப்பில் சூர்யா நடித்து வருகிறார். கே.வி.ஆனந்த் படத்தின் ஷூட்டிங், லண்டனில் தொடங்கி வட இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதன் இரண்டாவது ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார் சூர்யா. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ’என்.ஜி.கே’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்துள்ளார்.