15 மாதங்கள் கழித்து மதுரை திரையரங்கில் வெளியான ‘சூரரைப் போற்று’ - ரசிகர்கள் கொண்டாட்டம்

15 மாதங்கள் கழித்து மதுரை திரையரங்கில் வெளியான ‘சூரரைப் போற்று’ - ரசிகர்கள் கொண்டாட்டம்
15 மாதங்கள் கழித்து மதுரை திரையரங்கில் வெளியான ‘சூரரைப் போற்று’ - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான‘சூரரைப் போற்று’ திரைப்படம், 15 மாதங்களுக்குப் பிறகு மதுரை திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி நேரடியாக வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இந்தப்படத்தை, சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், சிக்யா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்தப் படம், ஓ.டி.டி. தளத்தில் இல்லாமல் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால், பெரும் வசூல் சாதனை புரிந்திருக்கும் என்று பலரும் கூறியிருந்தனர். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

மேலும் இந்தப் படம் சர்வேதச அளவில் பல்வேறு விருதுகளை வென்று இருந்தது. ஆஸ்கார் விருதுக்கும் இந்தப்படம் பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் வெறியேறியது. இதனால் திரையரங்குகளில் இந்தப் படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக திரையரங்க உரிமையாளர்கள், ஓ.டி.டி. தளத்தில் வெளியான படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தனர்.

இந்நிலையில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம், 15 மாதங்களுக்குப் பிறகு, மதுரையில் உள்ள மிட்லண்ட் திரையரங்கில் நேற்று திரையிடப்பட்டுள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், காலையில் இருந்தே சூர்யாவின் கட்டவுட்டிற்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து 'சூரரைப் போற்று' படத்தை திரையில் ரசித்த ரசிகர்களின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com