வெற்றிமாறன் - சூர்யாவின் 'வாடிவாசல்’ பட இசைப்பணிகள் இன்று முதல் துவக்கம்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தின் இசை பணிகள் இன்றுமுதல் தொடங்குவதாக ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறனும் நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி படம் இயக்கி வருகிறார். இருவரும் தங்கள் படங்களை முடித்தப்பிறகு ‘வாடிவாசல்’ படத்தில் இணையவிருக்கிறார்கள். சூர்யாவின் பிறந்தநாள் அன்று ‘வாடிவாசல்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.
தாணு தயாரிக்கும் ஜல்லிக்கட்டு கதைக்களத்தைக் கொண்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா ரசிகர்கள் பலரும் வாடிவாசல் அப்டேட் எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இன்று முதல் வாடிவாசல் படத்திற்கான இசைப் பணிகளை துவங்குகிறேன்’ என்று ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.
இதனால், சூர்யா, வெற்றிமாறன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.