சினிமா தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்... செயல்படுத்திய சுரேஷ் காமாட்சி
சமீபத்தில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் வரை காயமடைந்தனர். அச்சம்பவத்தை தொடர்ந்து திரைப்படத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதனை முதன் முதலில் செயல்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 30 கோடி ரூபாய் மதிப்புக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறார். அதற்கான ப்ரீமியம் தொகையான 7.8 லட்ச ரூபாயினை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து அவர் செலுத்தியிருக்கிறார்.
‘செயல்... அதுவே சிறந்த சொல்’ என்பார்கள். அதன்படி வெகுகாலமாக ஒலித்த சினிமா தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைக்கு சுரேஷ் காமாட்சி தீர்வு கொடுத்திருக்கிறார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர். லைகா போன்ற நிறுவனங்கள் பெரும் முதலீட்டில் சினிமா தயாரிக்கின்றனர்., ஆனால் இவ்வளவு பெரிய இழப்பு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த பிறகும் கூட அவர்களின் தயாரிப்பில் உருவாகும் படங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளின் பாதுகாப்பை இன்னுமே அவர்கள் உறுதி செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது.