படப்பிடிப்பில் ராம் சரணுக்கு காயம்.. கோவையில் வெற்றிகரமாக நடைபெற்ற அறுவைசிகிச்சை!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவர், சமீபத்தில், 'பெத்தி' திரைப்படத்தில் நடித்துவந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு விறுவிறுப்பாக நடை பெற்றது. அப்போது அதில் இடம்பெற்ற சண்டைக் காட்சி ஒன்றில் ராம்சரண் பங்கேற்று நடித்தார். அப்போது அவருக்கு இடதுகை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் படத்தின் இறுதிகட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ராம்சரண் உடனடியாக பெரிய அளவிலான சிகிச்சை மேற்கொள்ளாமல் தற்காலிகமாக தள்ளி வைத்திருந்தார். ’பெத்தி’ படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டன. மருத்துவப் பரிசோதனையின் முடிவில், ராம்சரணுக்கு இடதுகை மணிக்கட்டில் தசைநார் கிழிவு மற்றும் லேசான எலும்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் தசைநார் முழுமையாக கிழிந்து உள்ளதால், உடனடியாக அறுவைசிகிச்சை செய்வது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்த அறுவைசிகிச்சை நடைபெற்றது. நிபுணர்கள் அடங்கிய குழு, இந்த நுட்பமான அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. சிகிச்சையின்போது அவரது தந்தை சிரஞ்சீவி, தாய் சுரேகா மற்றும் மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோர் மருத்துவமனையில் உடனிருந்து அவரைப் பார்த்துக்கொண்டனர். அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்குச் சில வாரங்கள் ஓய்வு எடுக்கப் பரிந்துரைத்துள்ளனர். மருத்துவர்களின் முறையான அனுமதிக்குப் பிறகே அவர் அடுத்த படத்தில் நடிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

