கெத்தான தனித்துவப் பாதை... நடிகர் நயன்தாராவின் திரைப் பயணம்!

கெத்தான தனித்துவப் பாதை... நடிகர் நயன்தாராவின் திரைப் பயணம்!
கெத்தான தனித்துவப் பாதை... நடிகர் நயன்தாராவின் திரைப் பயணம்!

தனது ரசிகர்களால் அன்பாக 'தலைவி' என்றும், திரையுலகினரால் 'லேடி சூப்பர்ஸ்டார்' என்றும் கொண்டாடப்படும் நடிகர் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு.

தமிழ்த் திரையுலகில் நாயகர்களை மையப்படுத்தாமல், பெண் 'ப்ரொட்டாகனிஸ்ட்' ஆக தன் பக்கம் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வல்லமை படைத்த பெண் நடிகர்களுள் முன்னிலையில் இருப்பவர் நயன்தாரா.

தனது ரசிகர்களால் அன்பாக 'தலைவி' என்றும், திரையுலகினரால் 'லேடி சூப்பர்ஸ்டார்' என்றும் கொண்டாடப்படும் நடிகர் நயன்தாரா, முன்னணி ஆண் நடிகர்களைப் போல, பல மொழிகளிலும் பிரமாண்டமான ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக தென்னிந்திய பெண் நடிகர்களில் மிகப்பெரிய அளவில் வெற்றிப் படங்களைக் கொடுப்பவராக தடம் பதித்துள்ளார். இந்தத் தலைமுறை நட்சத்திரங்களில் தன் இடத்தை மென்மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளார் நயன்தாரா.

கெத்து காட்டும் பாதை!

ஹீரோக்களுடன் டூயட்டுக்காக மட்டுமே வரக்கூடிய நாயகியாக அறிமுகமானவர் என்ற நிலையில் இருந்து, தற்போது உச்ச நட்சத்திரமாகவும், தென்னிந்திய திரையுலகில் அதிக ஊதியம் பெறும் பெண் நடிகராகவும் காலப்போக்கில் உயர்ந்த நயன்தாராவின் வளர்ச்சி எதுவும் அவ்வளவு சீக்கிரமாகவோ, மிக எளிதாகவோ நிகழவில்லை.

நயன்தாரா இன்றுபோல் அன்று இல்லை. அவரது திரைப்படத் தேர்வுகளும் மிகச் சிறப்பானதாக இருக்கவில்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் போராட்டங்களை சந்திக்க வேண்டிய கடினமான சூழலைக் கொண்டிருந்தார். 2012-ஆம் ஆண்டு வரை அவரது பெரும்பான்மையான படங்கள் தொடர்ந்து வழக்கமான கமர்ஷியல் பொழுதுபோக்கு சினிமாவாகவே இருந்தன. ஆனாலும், அதற்கடுத்த ஆண்டு வெளிவந்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் மீண்டெழுந்து, பொழுதுபோக்குடன் திறமையான நடிப்பாற்றலாலும் கவனிக்கத்தக்க உயரத்தை அடைந்தார். எல்லா தரப்பு ரசிகர்களையும், திரையில் அசரவைக்கும் அளவிற்கு எழுந்தார்.

'மாயா', 'நானும் ரௌடி தான்', 'டோரா', 'அறம்', 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்', 'ஐரா', 'மூக்குத்தி அம்மன்' முதலான படங்கள் வர்த்தக ரீதியிலும், நடிப்புத் திறன் வெளிப்பாட்டிலும் நயன்தாராவின் கிராஃப் உயரவைத்தன. இதற்கு, கதையையும் படக்குழுவையும் தேர்ந்தெடுப்பதில் நயன்தாரா காட்டும் முனைப்புதான் முக்கியக் காரணம்.

இந்தப் பட்டியலிலுள்ள படங்கள் அனைத்துமே பெண்களை மையப்படுத்திய படங்கள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றும் பல அம்சங்களில் தனித்துவம் மிக்கதாக இருந்துடன், பாக்ஸ்-ஆபீஸிலும் வெற்றியடைந்ததையும் கவனிக்க வேண்டும். மேலும் முழுப் படத்தையும் தனது தோளில் சுமந்து செல்லும் ஆற்றல் நயனுக்கு இருப்பதையும் இந்தப் படங்கள் வெளிக்கொணர்ந்தன.

இன்று ஒரு நல்ல கதை தயாராகுமானால், அது நயன்தாரா வீட்டுக் கதவை தட்டாமல் வேறு எங்கும் செல்லாது எனும் நிலைக்கு உயர்ந்துள்ளார். இளம் இயக்குநர்கள் பலரும் நயன்தாராவிற்காகவே கதை எழுதிக் கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது. அவர் முன்னே நிற்கும் வாய்ப்புகளின் வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைத்துறை வாழ்க்கையில் பல தோல்விகளை எதிர்கொண்டபோதும், நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் கடந்து கெத்து நடை போடுகிறார் நயன்தாரா.

அணுகுமுறையிலும் அசத்தல்!

ஊடக வெளிச்சத்தில் இருந்து நயன்தாரா விலகி இருக்கவே நினைக்கிறார். நிகழ்ச்சிகளில் அதிகமாகத் தலைகாட்டாமல் எப்போதும் செய்திகளில் இடம்பெறுவது எப்படி என்கின்ற யுக்தியை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அவர் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என எதிலும் இல்லை. விருது வழங்கும் விழாக்களை தவிர்த்து, பார்ட்டி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே காணப்படுவார். ஆனாலும்கூட தமிழகத்தைத் தாண்டியும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வசப்படுத்தியுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், அஜித்துடன் 'விஸ்வாசம்', விஜய் உடன் 'பிகில்', ரஜினிகாந்துடன் 'தர்பார்' என முன்னணி நடிகர்களுக்குகான நாயகி கதாபாத்திரத்திலும் தனது திரைப் பயணத்தை சமச்சீராகத் தொடர்கிறார்.

நயன்தாரா தனது பயணத்தை உயரிய இடத்திலிருந்து துவக்கினார். முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் 'மனசினகாரே' (மனதைத் தாண்டி) எனும் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். பிறகு, 2005-ஆம் ஆண்டில் நடிகர் சரத்குமார் நடித்த 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதே ஆண்டில் 'சந்திரமுகி' படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியடைந்து நயன்தாரா வெற்றிப்பட நடிகையானார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நடிக்க ஆரம்பித்தார்.

மாறிக்கொண்டே இருக்கும் கோலிவுட் உலகில் எவ்வாறு நிலைத்திருப்பது என்பதை இந்த வெற்றிகரமான நடிகர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். எந்த நடிகரும் தனது படத்தை விளம்பரம் செய்ய ஒவ்வொரு விழா மேடையாக ஏறி இறங்குவார்கள். ஆனால், நயன்தாராவின் அமைதியே படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும்.

'கோலமாவு கோகிலா' பட ப்ரோமோஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, ''மக்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நான் என் வாழ்க்கையை வாழ முடியாது. நான் சில முட்டாள்தனமான தவறுகளை என் வாழ்க்கையில் செய்திருக்கிறேன். ஆனால், எனக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்" என்றார். இந்த வெளிப்படையான அணுகுமுறையும் வெகுவாக ஈர்க்கவல்லது.

தமிழில் ரசிகர்கள் - திரையுலகப் பார்வையில் 'சூப்பர் ஸ்டார்' என்றால், அது ரஜினிகாந்த் மட்டும்தான். ரஜினிகாந்த் அனைவரையும் ஈர்க்கக் கூடிய வெகுஜன மக்களின் விருப்ப நடிகராகவும் இருக்கிறார். கடந்த மூன்று தலைமுறைகளாக ரஜினிகாந்தின் இடத்தை வேறெந்த நடிகராலும் நெருங்கக் கூட முடியவில்லை. அதேபோல், இந்திய அளவிலான வர்த்தகம் சார்ந்த திரையுலகில் பெண் நடிகர் ஒருவர் பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக கலக்கியவர், மறைந்த நடிகர் ஸ்ரீதேவி. இவர்களைப் போன்ற மகத்தான இலக்கை நோக்கி நகர்கிறார் நயன்தாரா.


நிறைய பிரபலங்கள் தங்கள் காதல் உறவுகளைப் பற்றி வெளிப்படையாக அறிவித்து, பொது இடங்களில் தோன்றத் தொடங்கியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன். 'நானும் ரௌடி தான்' படத்தில்தான் இருவரும் சந்தித்துக் கொண்டனர். நட்பு அடுத்தடுத்த நிலைக்குச் சென்றது. ஒன்றாக வெளியே செல்வது, புகைப்படங்களைக் வெளியிடுவது போன்று பொதுத் தளங்களில் தங்கள் உறவை வெளிப்படுத்திக் கொண்டனர்.

காதல் உறவு, திருமணம் போன்ற விஷயங்கள் தனிப்பட்டவை என்றாலும், அதுகுறித்து வதந்திகளால் பரபரப்புக்கு ஆளாகாமல், தனது வெளிப்படையான அணுகுமுறையால், 'என் திரைப் பயணத்தின்மீது மட்டும் உங்கள் கவனம் இருக்கட்டும்!' என்று ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் மறைமுகச் செய்தியைத் தருகிறார்.

இந்தத் தனித்துவ திரைப்பயணத்தால், ரசிகர்களை மகிழ்விக்கும் நயன்தாராவின் மாரத்தான் ஓட்டம் தொடரட்டும்!

- ஜஸ்டின் துரை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com